×

வங்கதேசத்துடன் முதல் டி20 இந்தியா அபார வெற்றி

குவாலியர்: வங்கதேச அணியுடனான முதல் டி20 போட்டியில், இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது மாதவ்ராவ் சிந்தியா ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. இந்திய அணியில் மயாங்க் யாதவ் (22 வயது, டெல்லி), நிதிஷ் குமார் (21 வயது, ஆந்திரா) அறிமுகமாகினர். பர்வேஸ், லிட்டன் தாஸ் இணைந்து வங்கதேச இன்னிங்சை தொடங்கினர்.

தாஸ் 4 ரன், பர்வேஸ் 8 ரன் எடுத்து அர்ஷ்தீப் வேகத்தில் ஆட்டமிழக்க, வங்கதேசம் 14 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது. தவ்ஹித் 12, மகமதுல்லா 1, ஜேகர் அலி 8 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஓரளவு தாக்குப்பிடித்த கேப்டன் ஷான்டோ 27 ரன் (25 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து வெளியேறினார். மெஹிதி ஹசன் மிராஸ் ஒரு முனையில் உறுதியுடன் போராட… சக வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர்.

வங்கதேசம் 19.5 ஓவரில் 127 ரன் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. மிராஸ் 35 ரன்னுடன் (32 பந்து, 3 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் அர்ஷ்தீப், வருண் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். ஹர்திக், மயாங்க் யாதவ், வாஷிங்டன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். சிறப்பாகப் பந்துவீசிய அறிமுக வேகம் மயாங்க் யாதவ் 4 ஓவரில் 1 மெய்டன் உள்பட 21 ரன்னுக்கு 1 விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

அடுத்து களமிறங்கிய இந்தியா 11.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. சஞ்சு சாம்சன் 29 ரன் (19 பந்து, 6 பவுண்டரி), அபிஷேக் 16, சூரியகுமார் 29 ரன் (14 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். நிதிஷ் குமார் 16 ரன், ஹர்திக் 39 ரன்னுடன் (16 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி டெல்லியில் நடக்கிறது.

The post வங்கதேசத்துடன் முதல் டி20 இந்தியா அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : India ,T20 ,Bangladesh ,Gwalior ,Madhavrao Scindia Stadium ,Mayank Yadav ,Dinakaran ,
× RELATED மகளிர் டி20 தொடர் ஒயிட்வாஷ் ஆனது வங்கதேசம்: அயர்லாந்து மகத்தான சாதனை