- ராமதாஸ்
- திமுக
- பாமக
- ஆர்.எஸ்.பாரதிகாட்டம்
- சென்னை
- ஆர்.எஸ். பாரதி
- ராமதாஸ்
- முதல் அமைச்சர்
- செந்தில் பாலாஜி
சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று வெளியிட்ட அறிக்கை: செந்தில் பாலாஜியை முதல்வர் தியாகி என்பதா என ராமதாஸ் அறிக்கை விட்டிருக்கிறார். அரசியல் அறியாமல் அரைவேக்காடாய் வந்த அறிக்கை இது. செந்தில் பாலாஜி மீது 2015, 2017 மற்றும் 2018-ல் 3 வழக்குகள் பதியப்பட்டன. 2015ல் பதிவான வழக்கு பற்றி அப்போதிருந்த விவரங்களின் அடிப்படையில்தான் 2016 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் அன்றைய எதிர்க் கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜி குறித்துப் பேசினார்.
ஆனால், செந்தில் பாலாஜி திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்தபோது, தான் குற்றமற்றவன். தன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியால்தான் இந்த வழக்குகள் புனையப்பட்டது எனச் சொன்னார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர இசைவு ஆணை கேட்டு வந்த கோப்பில், எந்த தாமதமும் இல்லாமல் முதல்வர், ஆட்சி வேறு, கட்சி வேறு என்ற நிலையில் கோப்புகளில் உள்ள அம்சங்களை மட்டுமே கவனித்து தன் சொந்த விருப்பு வெறுப்புகளை கடந்து கடமையாற்றியது எல்லாம் ராமதாசுக்குப் புரியவில்லையா? இல்லை, புரியாமல் நடிக்கிறாரா?.
செந்தில் பாலாஜி தியாகம் செய்துவிட்டு சிறை செல்லவில்லைதான். ஆனால், பொய் வழக்குகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட பணப்பரிமாற்ற வழக்கில், ஒன்றிய அரசின் எதேச்சாதிகார போக்கால் அவரை கைது செய்து, அழுத்தம் தந்து துன்புறுத்தி வாக்குமூலம் பெற்று, திமுகவின் மீது மேலும் பொய் வழக்குகள் போடலாம் என்ற கனவை அவர் பொய்யாக்கினார். அதற்காக 471 நாட்கள் சிறையில் இருந்தார். பாஜவில் அவரை சேர்த்து திமுகவுக்கு எதிராகக் களமாட நினைத்தார்கள்.
அதற்கு அடிபணியாமல், அஞ்சாமல் நின்ற உறுதிதான் தியாகம். அது நல்லெண்ணம் கொண்டோருக்கு மட்டுமே புரியும். ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டும் எடப்பாடி, பன்னீர்செல்வம் தலைமையிலான பினாமி அரசின் ஊழல்களையும் மறைக்க முடியாது; அதனால் ஏற்பட்ட பாவங்களைக் கழுவ முடியாது என முன்பு ராமதாஸ் சொன்னார். அந்த பினாமிகளோடுதான் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் ராமதாஸ் கூட்டணி வைத்தார். பாமகவின் பாவங்களை கழுவிவிட்டு, வந்து ராமதாஸ் திமுகவை விமர்சிக்கட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post பாமகவின் பாவங்களை கழுவிவிட்டு வந்து திமுகவை ராமதாஸ் விமர்சிக்கட்டும்: ஆர்.எஸ்.பாரதி காட்டம் appeared first on Dinakaran.