×

ஆதிதிராவிட நல விடுதிகளில் இடநெருக்கடியை தீர்க்க நடவடிக்கை: கண்காணிப்பு பணிகளில் அரசு தீவிரம்

நெல்லை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவர்களுக்கு இட நெருக்கடி இருப்பதை ஆய்வு செய்து, அதற்கான வசதிகளை செய்து கொடுக்க ஆதிதிராவிட நல இயக்குநரகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து ஆதிதிராவிட நல இயக்குநரகம் அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் அரசாணையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களை விட அதிகளவில் மாணவர்கள் தங்கியிருப்பதாகவும், இடநெருக்கடியில் மாணவர்கள் அவதிப்பட்டு வருவதாகவும் புகார்கள் வந்துள்ளன.

இதற்காக துறை செயலர் அறிவுறுத்தலின் பேரில் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை ஆய்வு செய்திடும் வகையில் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர், அலுவலக கண்காணிப்பாளர், இளநிலை பொறியாளர், விடுதி காப்பாளர்கள் கூகுள் மீட் மூலம் எங்கள் இணைப்பில் குறிப்பிட்ட தினங்களில் பங்கு பெற வேண்டும். சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள் அவரவர் விடுதிகளில் இருந்து மட்டுமே இதில் பங்கேற்பது அவசியம். விடுதி தொடங்கப்பட்ட அரசாணையை கண்டிப்பாக கையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாள் ஒன்றுக்கு 4 மாவட்டங்கள் வீதம் வரும் 11ம் தேதி வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

ஆதிதிராவிட நல இயக்குநரக ஆணைப்படி வரும் 8ம் தேதி காலை 11 மணி முதல் 2 மணி வரை தென்காசி மாவட்ட ஆதிதிராவிட விடுதிகளுக்கான ஆய்வுகளும், வரும் 9ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை நெல்லை மாவட்ட விடுதிகளுக்கான ஆய்வுகளும் நடக்கிறது. வரும் 10ம் தேதியன்று பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை தூத்துக்குடி மாவட்ட விடுதிகளுக்கான ஆய்வும் ஆதிதிராவிட நல இயக்குனரக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட உள்ளது. இதேபோல் பிறமாவட்டங்களுக்கும் உரிய ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது.

The post ஆதிதிராவிட நல விடுதிகளில் இடநெருக்கடியை தீர்க்க நடவடிக்கை: கண்காணிப்பு பணிகளில் அரசு தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Adhi Dravida ,Nellai ,Directorate of Adi Dravida Welfare ,Adi Dravida ,Adi Dravida welfare ,
× RELATED திமுக முன்னாள் அமைச்சர் க.சுந்தரம்...