×

சைவ ஓட்டலில் பார்சல் வாங்கிச் சென்ற பன்னீர் பட்டர் மசாலாவில் கரப்பான் பூச்சி

Pannerbuttermasala, Vannarapettai* முறையிட்டபோது நிர்வாகம் அலட்சியம்
* புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார்

தண்டையார்பேட்டை : சைவ ஓட்டலில் இருந்து வாடிக்கையாளர் ஒருவர் பார்சல் வாங்கிச் சென்ற பன்னீர் பட்டர் மசாலாவில் கரப்பான்பூச்சி கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாடிக்கையாளர் முறையிட்டபோது, ஓட்டல் நிர்வாகம் அலட்சியமாக பதில் கூறியதையடுத்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே ஓட்டல்களில் தரமற்ற உணவு விற்பனை செய்யப்படுவது, சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் தயார் செய்வது, கெட்டுப்போன இறைச்சி பயன்படுத்துவது என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. வடசென்னையில் அசைவ ஓட்டல் மற்றும் சைவ ஓட்டல்கள் அதிகமாக உள்ளன. இதில், தற்போது இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஷவர்மா, கிரில் சிக்கன், தந்தூரி சிக்கன், பிரியாணி கடைகள் தெருவுக்குத் தெரு அதிகம் உள்ளன.

இவர்கள் தொழில் போட்டி காரணமாக சுகாதாரமான இறைச்சிகளை வாங்காமல் குறைந்த விலையில் சிக்கன், மட்டன் ஆகியவற்றை வாங்கி ப்ரீஸரில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு சமைத்துக் கொடுக்கிறார்கள். ஷவர்மா என்ற உணவு சிக்கனால் செய்யப்படுகிறது. இதனை வாங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் இளைஞர்கள், இளம்பெண்கள் கூட்டம் கூட்டமாக கடைக்கு வருகிறார்கள். இது தரம் குறைந்து விற்பனை செய்யப்படும் காரணத்தால் சாப்பிடுபவர்களுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுகிறது.

வடசென்னையில் பிரபல அசைவ ஓட்டலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாங்கிய ஷவர்மா கெட்டுப் போயிருந்ததால் அதை சாப்பிட்ட திருவொற்றியூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதே ஓட்டலில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கெட்டுப்போன மீன், சிக்கன் விற்பனை செய்யப்பட்டதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டு அந்த ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, கொடுங்கையூரில் பிரபல பிரியாணி கடையில் விற்பனை செய்யப்பட்ட பிரியாணி தரமற்ற நிலையில் விற்பனை செய்யப்பட்ட காரணத்தால் அதை சாப்பிட்ட 50க்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இதன் காரணமாக அந்த கடை மூடப்பட்டது. இப்படி தொடர்ந்து வடசென்னை பகுதியில் தரமற்ற உணவு விற்பனை செய்யப்படுவதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் புகார் வந்தால் மட்டுமே ஒவ்வொரு ஓட்டலுக்கும் சென்று சோதனை மேற்கொள்கிறார்கள். பொதுவாக, சோதனை மேற்கொள்ளவில்லை என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்நிலையில், நேற்று முன்தினம் புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு சைவ ஓட்டலில் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் பன்னீர் பட்டர் மசாலாவை பார்சல் கட்டி வாங்கிச் சென்றுள்ளார்.

பின்னர் வீட்டிற்குச் சென்று பிரித்து பார்த்தபோது, அதில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மகேஷ், இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்திடம் கூறியபோது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. எனவே, அவர் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்ந்து, வடசென்னை பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதற்கு சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

The post சைவ ஓட்டலில் பார்சல் வாங்கிச் சென்ற பன்னீர் பட்டர் மசாலாவில் கரப்பான் பூச்சி appeared first on Dinakaran.

Tags : Paneer Butter Masala ,Nuduvanarpet ,Dandiyarpet ,Dinakaran ,
× RELATED இந்தியன் ஆயில் நிறுவன டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று வேலைநிறுத்தம்