×

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா; 1 லட்சத்து 7 ஆயிரத்து 821 பேருக்கு பட்டங்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு


சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழாவில் ஒரு லட்சத்து 7,821 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது ஆண்டு பட்டமளிப்பு விழா அதன் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். பல்கலைக்கழக இணைவேந்தரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி முன்னிலை வகித்தார். இந்த விழாவில் 2022-23, 2023-24-ம் கல்வியாண்டுகளில் படித்து முடித்த சென்னை பல்கலை. துறைசார்ந்த 1,404 பேர், இணைப்புக் கல்லூரிகளை சேர்ந்த 89,053 பேர், தொலைதூரக் கல்வி நிறுவனத்தை சேர்ந்த 16,263 பேர், ஆராய்ச்சி படிப்பை முடித்த 70 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 7,821 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

அவற்றில் 1,031 பேருக்கு ஆளுநர் ரவி மூலம் நேரடியாகவும், மீதமுள்ள மாணவர்களுக்கு அந்தந்த கல்லூரிகள் வாயிலாகவும் பட்டங்கள் வழங்கப்பட்டன. நேரடியாக பட்டங்கள் பெற்றவர்களில் 78 வயதை பூர்த்தி செய்த தங்கமணி, ஓய்வு பெற்ற டிஜிபி ஜாங்கிட், ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ஆகியோர் பிஎச்டி பட்டம் பெற்றனர்.  இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தேசிய அணுசக்தி கழகத்தின் முன்னாள் தலைவரும், மும்பை ஹோமி பாபா தேசிய நிறுவனத்தின் வேந்தருமான அனில் காகோத்கர் பேசும்போது, ‘‘உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. வளர்ச்சியின் அடிப்படையில் நாம் கணிசமான முன்னேற்றம் அடைந்து இருப்பதுடன், நாட்டின் பொருளாதார வேகமும் வேகமாக வளர்கிறது. ​​தற்போது 5வது இடத்தில் உள்ள நமது பொருளாதாரம் இன்னும் 10 ஆண்டுகளில் 3ம் இடத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், சராசரி இந்தியரின் தனிநபர் வருமானம் உலகளவில் 140வது இடத்தில் உள்ளது. சராசரி இந்தியரின் வாழ்க்கைத் தரம் வளர்ந்த நாடுகளில் உள்ள தனிநபர்களின் வாழ்க்கைத் தரத்துக்கு இணையாக உயரவேண்டும். இதற்கு நமது தனிநபர் வருமானம் சுமார் 7 மடங்கு அதிகரிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். விழாவில் சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இது துணைவேந்தர் இல்லாமல் சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் முதல் பட்டமளிப்பு விழாவாகும். ஒருங்கிணைப்புக் குழுவே தற்போதைய பல்கலைக்கழக நிர்வாகத்தை கவனிக்கிறது. அதன்படி, துணைவேந்தரின் கையொப்பத்திற்கு பதிலாக உயர் கல்வித் துறை செயலாளரின் கையொப்பம் பதிவிடப்பட்டு மாணாக்கர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா; 1 லட்சத்து 7 ஆயிரத்து 821 பேருக்கு பட்டங்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chennai University ,Governor RN Ravi ,Minister ,Ponmudi ,CHENNAI ,convocation ceremony ,166th convocation ceremony ,Tamil Nadu ,Ceremony ,Dinakaran ,
× RELATED பள்ளிக்கு ஆயுதங்களுடன் வந்த மாணவருக்கு ‘டிசி’: 3 மாணவர்கள் சஸ்பெண்ட்