×

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்; தேவைப்பட்டால் ரகசிய விசாரணை நடத்தப்படும்: தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் ஐகோர்ட் கருத்து

சென்னை: சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து, அவரது பெற்றோர், பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞர் மீது அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றிருக்கின்றனர். அப்போது காவல் ஆய்வாளர் தங்களை தாக்கியதாகவும், இளைஞரின் பெயரை புகாரிலிருந்து நீக்க வற்புறுத்தியதாகவும் சிறுமியின் பெற்றோர் வீடியோ வெளியிட்டிருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், என்.மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி அவரது பெற்றோருடன் உள்ளார். சட்டவிரோத காவலில் இல்லை என்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தயாராக உள்ளோம் என்றார். இதையடுத்து, மகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், தாயின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பெறப்பட்ட வாக்கமூலத்தின் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதாக தெரிவித்தார்.

அப்போது குறுகிட்ட நீதிபதிகள், வாக்குமூலத்தின் ஆடியோக்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டது யார் என்று கேட்டனர். மனுதாரர் தரப்பில், காவல் ஆய்வாளர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதிகள், போக்சோ வழக்கு என்பதால், தேவைப்பட்டால் ரகசிய விசாரணை மேற்கொள்ளலாம். காவல்துறையின் பதில்மனு தொடர்பாக பதிலளிக்க பாதிக்கப்பட்ட சிறுமி தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்; தேவைப்பட்டால் ரகசிய விசாரணை நடத்தப்படும்: தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.

Tags : ICourt ,Chennai ,Anna Nagar, Chennai ,Anna Nagar All Women Police Station ,Dinakaran ,
× RELATED தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்.. 2017-2021...