×

பள்ளியில் வளைகாப்பு நடத்தி மாணவிகள் ரீல்ஸ்: கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை

வேலூர்: அரசு பள்ளியில் வளைகாப்பு நடத்தி ரீல்ஸ் வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் அருகே அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் சிலர் சக மாணவிக்கு பள்ளி வளாகத்திலேயே வளைகாப்பு நடத்துவது போன்று ஒரு ‘ரீல்ஸ்’ வீடியோ வைரலாகி வருகிறது. வளைகாப்புக்கு தேவையான வளையல், பூ, சந்தனம், பன்னீர் சொம்பு உட்பட எல்லா பொருட்களையும் வைத்து, மாணவிக்கு நலங்கு வைத்து வளைகாப்பு நடத்தி போட்டோ ஷூட் எடுத்துள்ளனர்.

இதைவிட உச்சகட்டமாக, வளைகாப்பு நடத்தப்போவதாக அழைப்பிதழ் தயார் செய்த மாணவிகள், அதில் வளைகாப்பு நடக்கும் தேதி, நேரம், இடம் என பதிவு செய்திருந்தனர். அழைப்பிதழ் மற்றும் வளைகாப்பு நிகழ்ச்சியை ரீல்ஸ் வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பதிவேற்றமும் செய்துள்ளனர். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. மாணவிகள் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஆசிரியர்கள், பெற்றோரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மாணவிகள் தொடர்பான பிரச்னை என்பதால் தீர விசாரித்து பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைக்கு சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரை அழைத்து விசாரித்துள்ளோம். அந்த பள்ளியில் மட்டும் மதிய உணவு இடைவேளையின் போது ஆசிரியர்களையும் மாணவிகளோடு அமர்ந்து சாப்பிட சொல்லியுள்ளோம். ஏற்கனவே பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி இதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். அந்த மாணவிகளின் பெற்றோரையும் அழைத்து பேச திட்டமிட்டுள்ளோம்’ என்றனர்.

The post பள்ளியில் வளைகாப்பு நடத்தி மாணவிகள் ரீல்ஸ்: கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Reels ,Education Department ,Vellore ,Government Women's Secondary School ,Department ,
× RELATED மாதவரத்தில் இருந்து உல்லாசத்துக்கு...