×

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள், தன்னார்வலர்களிடம் மாபெரும் சர்வே நடத்த திட்டம்: மாநகராட்சி புது முயற்சி

சிறப்பு செய்தி
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள், தன்னார்வலர்களிடம் மாபெரும் சர்வே நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியானது, ஒவ்வொரு வடகிழக்கு பருவமழைக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்றதும் சென்னையில் மழை பாதிப்பு உள்ள இடங்களை அடையாளம் கண்டு, வடிகால் சீரமைப்பு மற்றும் புதிய வடிகால் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில், தற்போது சென்னை மாநகராட்சியானது தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மெட்ரோ ரயில் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், நீர்நிலைகளில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றுவது உள்ளிட்டவை போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

அதோடு குடிநீர் வாரியம், நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்வாரியம், ரயில்வே துறை, பிஎஸ்என்எல் உள்ளிட்ட சேவை துறைகளும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறது. இதேபோல், மாநகராட்சி நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே, பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களிடம் சென்னை மாநகராட்சியானது கருத்து கேட்டு வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு தெருக்களிலும், என்ன மாதிரியான பிரச்னைகள் உள்ளது. கடந்த முறை எந்த பகுதிகளில் அதிகளவில் மழை தேங்கியது. எவ்வளவு நேரம் மின்சாரம் தடைப்பட்டது போன்ற பல்வேறு கேள்விகளை முன்வைத்து மாநகராட்சி ஒரு மாபெரும் சர்வே நடத்துகிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பருவமழை தொடங்க இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில், தற்போதில் இருந்தே தன்னார்வலர்களை தயார் செய்வது, பேரிடர் காலத்தில் மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க இடம் தேர்வு செய்வது போன்ற பணிகளை மாநகராட்சியானது தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, பேரிடர் காலங்களில் தன்னார்வலர்களாக எந்தெந்த துறை, எந்தெந்த நிறுவனங்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டதோ, அவர்களை இந்த முறை அழைத்து பேசிக் கொண்டு இருக்கிறோம். மேலும், மழைக்காலங்களில் மக்களுக்கு உடனடியாக தகவல்களை பரிமாற சோசியல் மீடியாக்களிடம் பேசி வருகிறோம். சூரியன் எப்.எம் போன்ற நிறுவனங்கள் மழைக்காலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க சென்னை மாநகராட்சியுடன் கை கோர்த்துள்ளது. இதுதவிர்த்து ஒவ்வொரு சாலை முனைகளிலும், தூர்வாரும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

சென்னையில் 3,040 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழைநீர் வடிகால் உள்ளது. அதில் முதற்கட்ட பணியாக 792 கிலோ மீட்டர் கால்வாயில் 611 கிலோ மீட்டர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி மூலம் பராமரிக்கப்படும் 51.4 கிலோ மீட்டர் நீளமுள்ள நீர் வழி கால்வாய்களை மிதக்கும் ஆம்பியன்ட் ரோபோட் எக்ஸ்லேட்டர் மூலம் 60 சதவீதம் தூர்வரும் பணி முடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 69 ஆயிரத்து 17 எண்ணிக்கை கொண்ட வண்டல் மண் சேகரிக்கும் தொட்டியில் 64 ஆயிரத்து 425 தொட்டியில் தூர்வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளது. 2021 முதல் 2024 வரை ₹2 ஆயிரத்து 958 கோடி மதிப்பீட்டில் 745.79 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதியதாக மழைநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. மேலும் ₹2020.36 கோடி மதிப்பீட்டில் 400 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாற்று ஏற்பாடு
2021 முதல் 2024 வரை 12 ஆயிரத்து 6 புதிய சாலைகள் 2049.30 கிலோ மீட்டர் நீளத்திற்கு ₹1,645 கோடி செலவில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. புதிய சாலைகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. சென்னையில் 20 இடங்களில் அடைக்கப்பட்டுள்ள கால்வாய்களுக்கு மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் அந்தந்த இடங்களில் ஆய்வு செய்ய இருக்கிறார்கள்.

1500 மின்கம்பங்கள் சீரமைப்பு
மழைக்காலத்தில் மின்சார அசாம்பாவிதங்களை தடுக்க சுமார் 1500 மின்கம்பங்களை சென்னை மாநகராட்சி சீர் செய்து வருகிறது. மின்கம்பங்களின் கீழ் கொட்டப்படும் கழிவுகளை மாநகராட்சி அகற்றி வருகிறது. டெங்கு, வைரஸ் காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கைகளிலும் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.

The post வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள், தன்னார்வலர்களிடம் மாபெரும் சர்வே நடத்த திட்டம்: மாநகராட்சி புது முயற்சி appeared first on Dinakaran.

Tags : North-East Monsoon: Corporation ,Special News Chennai Municipal Corporation ,Northeast Monsoon ,Chennai Corporation ,DMK government ,Chennai ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை...