×

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிலத்தை மாதர் சங்கத்துக்கு குத்தகைக்கு விட்ட விவகாரம்; அறநிலைய துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக பசுமை வழிச்சாலையில் உள்ள 10 கிரவுண்ட் நிலம், இந்திய மாதர் சங்கம் என்ற அமைப்புக்கு, 2010ம் ஆண்டு முதல், 29 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்க ஒப்புதல் அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ரூ.40 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை மாதம் ரூ.3 ஆயிரம் வாடகைக்கு வழங்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், நியாயமான வாடகை நிர்ணயிக்கப்படாததால் கோயிலுக்கு பலகோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதால், தனியார் ஆடிட்டரை நியமித்து, இழப்பீட்டை கணக்கிட்டு, கோயிலுக்கு உரிய இழப்பீட்டை வசூலிக்க உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அறநிலைய துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன், நிலத்தை குத்தகைக்கு கொடுப்பது தொடர்பாக ஆட்சேபங்கள் கோரிய போது, 2012ல் மனுதாரர் ஆட்சேபம் தெரிவித்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு பின் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். தற்போது அந்த நிலத்துக்கு ரூ.4 லட்சம் வாடகை நிர்ணயிப்பது தொடர்பாக அறநிலைய துறை ஆணையர் பரிந்துரை அனுப்பியுள்ளார்’ என்றர். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘கடந்த 2011ம் ஆண்டு அரசாணையை திரும்ப பெற கோரி 2013ம் ஆண்டு அறநிலைய துறை ஆணையர் அளித்த பரிந்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்குமாறு இந்துசமய அறநிலைய துறைக்கு உத்தரவிட்டனர்.

 

The post மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிலத்தை மாதர் சங்கத்துக்கு குத்தகைக்கு விட்ட விவகாரம்; அறநிலைய துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Mylapore Kapaleeswarar Temple ,Matar Sangha ,CHENNAI ,Green Lane ,India ,Matar Sangam ,Matar Sangh ,Charity Department ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...