×

தீவிரமடையும் மாணவர் போராட்டம் மணிப்பூரில் மீண்டும் ஊரடங்கு: 3 மாவட்டங்களில் அமலானது

இம்பால்: இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட இம்பால் பள்ளத்தாக்கில் அமைதியை மீட்டெடுக்கக் கோரி மாணவர்கள் போராட்டம் வெடித்ததால் மணிப்பூரில் 3 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 5 நாட்களுக்கு இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி, மெய்டீஸ் இனத்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட இனக்கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக வன்முறைகள் நடக்காமல் இருந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் மீண்டும் அமைதியை சீர்குலைக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. எனவே மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்கவும், சட்டம் ஒழுங்கை சமாளிக்க முடியாமல் திணறும் மாநில போலீஸ் டிஜிபி, பாதுகாப்பு ஆலோசகரை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் தலைமை செயலகம், ஆளுநர் மாளிகை முன்பாக நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

மணிப்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிலர் போலீஸ் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியும், துப்பாக்கி சூடு நடத்தியும் மாணவர்களை விரட்டிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இம்பாலில் உள்ள குவைராம்பண்ட் பெண்கள் சந்தையில் முகாமிட்டு இரவு முழுவதும் தங்கினர். இந்நிலையில், மாணவர் போராட்டம் தீவிரமடைவதைத் தொடர்ந்து இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மாவட்டங்களில் நேற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், அது திரும்பப் பெறப்பட்டிருப்பதாகவும், மறுஉத்தரவு வரும் வரை ஊரடங்கு நீடிக்கும் எனவும் மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், தவுபால் மாவட்டத்தில் பிஎன்எஸ்எஸ் பிரிவு 163 (2) இன் கீழ் 5க்கும் மேற்பட்டோர் கூட தடை விதிக்கப்பட்டது.

இதுதவிர, மாநிலம் முழுவதும் இன்டர்நெட் சேவை அடுத்த 5 நாட்களுக்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. படங்கள், வெறுப்பு பேச்சு மற்றும் வெறுப்பு வீடியோக்களை பரப்புவதற்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. போராட்டம் குறித்து மாணவர் தலைவர் சி.விக்டர் சிங் நேற்று அளித்த பேட்டியில், ‘‘நாங்கள் முன்வைத்த 6 கோரிக்கைகளுக்கு ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா பதிலளிக்க 24 மணி நேர கெடு விதித்துள்ளோம். காலக்கெடு முடிந்ததும் எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்’’ என்றார். வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்த மாணவர்கள் போராட்டம் பெரும் கலவரத்துடன் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்ததால், மணிப்பூரில் முன்னெச்சரிக்கையாக ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது.

 

The post தீவிரமடையும் மாணவர் போராட்டம் மணிப்பூரில் மீண்டும் ஊரடங்கு: 3 மாவட்டங்களில் அமலானது appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,Imphal valley ,Kuki ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்