×

வேலூர் டிஐஜி வீட்டில் ரூ4.25 லட்சம் திருடியதால் தாக்குதல்; சேலம் சிறையில் கிருஷ்ணகிரி கைதியிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை: வாக்குமூலம் வீடியோவில் பதிவு

சேலம்: வேலூர் சிறை டிஐஜி வீட்டில் ₹4.25 லட்சம் திருடிய விவகாரத்தில் தாக்குதலுக்கு ஆளான ஆயுள் கைதியிடம் சேலம் சிறையில் சிபிசிஐடி எஸ்.பி. தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (30). கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர். வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை, சிறைத்துறை டிஐஜி வீட்டு வேலைக்கு அழைத்து சென்றனர். அப்போது வீட்டிற்குள் இருந்த ₹4.25 லட்சம் பணத்தை அவர் திருடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை சிறையில் தனியறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக அவரது தாய் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பாக வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் விசாரணை நடத்த உத்தரவிட்டனர். அவரது அறிக்கையின் அடிப்படையில் கைதி சிவக்குமாரை சேலம் சிறைக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதிகள், சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிற 17ம் தேதிக்குள் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

இதன்படி ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அதே நேரத்தில் வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உள்பட 14 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சிறை அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் கைதி சிவக்குமாரிடம் விசாரணை நடத்த வேலூர் சிபிசிஐடி எஸ்.பி. வினோத் சாந்தாராம் தலைமையில் சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி சசிதர், சேலம் டிஎஸ்.பி. சென்னீஸ் இளங்கோ, இன்ஸ்பெக்டர் இந்திரா, எஸ்.ஐ. அசோக்குமார், ஏட்டு சூரியபிரபு ஆகியோர் 3 கார்களில் இன்று காலை 10 மணிக்கு வந்தனர். அங்கு கூடுதல் கண்காணிப்பாளர் அறையில் வைத்து கைதி சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதனை வீடியோவில் பதிவு செய்தனர். ஏற்கனவே கைதி சிவக்குமாரிடம் வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தி அறிக்ைக கொடுத்துள்ளார். அதன்அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளதால் மேலும் 2 பேர் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.

The post வேலூர் டிஐஜி வீட்டில் ரூ4.25 லட்சம் திருடியதால் தாக்குதல்; சேலம் சிறையில் கிருஷ்ணகிரி கைதியிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை: வாக்குமூலம் வீடியோவில் பதிவு appeared first on Dinakaran.

Tags : Vellore DIG ,CBCID ,Salem Jail ,Salem ,Jail ,CBCID S.P. ,Vellore Jail DIG ,Sivakumar ,Bochampalli ,Krishnagiri district ,Dinakaran ,
× RELATED சென்னையில் முகாமிட்ட மலேசிய மோசடி...