×

தனுசு ராசிக்காரர்களின் இல்லக்கனவை நனவாக்கும் இறைவன்

குருவின் ராசியிலேயே கொஞ்சம் வலிமையானது தனுசுதான். ராசியின் சின்னம் வில்லாக இருந்தாலும் அவ்வளவு சீக்கிரம் வீடு விஷயத்தில் வளைந்து கொடுக்க மாட்டீர்கள். வீட்டு லோன் என்றாலே சின்ன பயம் வருவதைத் தவிர்க்க முடியாது. ‘‘கையில நாலு காசு சேர்ந்தாலே அந்தக் கடன், இந்தக் கடன்னு பாதி பணம் காலியாகுது’’ என்று புலம்பத் தொடங்குவீர்கள். ‘‘நாப்பத்தெட்டு கேள்வி கேட்பாங்க. இல்லாத வருமானத்தை இருக்கறதா காமிச்சு வேற லோன் வாங்கணும். எனக்கு அப்படி வாங்கறதுல இஷ்டமே இல்லை’’ என்று சொந்த வீட்டுக் கனவை உங்களில் சிலர் சுக்குநூறாக்குவீர்கள். கட்டிடகாரகனான சுக்கிரன் கடன்காரனாகவும் வருவதுதான் இதற்குக் காரணம். எனவே, ‘கடன் வாங்கி சொந்த வீட்டுக்குப் போவதா… இல்லை, கடன் இல்லாமல் வாடகை வீட்டிலேயே காலம் தள்ளுவதா’ என்று யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். கட்டிடகாரகன் சுக்கிரன் உங்களுக்குப் பகையாளியாக இருந்தாலும், பூமிகாரகனான செவ்வாய் உங்களுக்குப் பக்க பலமாக இருப்பார். எனவே, புறநகரில் ஒரு கிரவுண்டாவது இடம் இருக்கும். ‘‘இருவது வருஷத்துக்கு முன்னாடி வாங்கிப் போட்டது. இப்போ எப்படி வளர்ந்துடுச்சி’’ என்பீர்கள். ‘‘நம்ம வேலையை நாம பார்த்துக்கிட்டிருப்போம். வர்றபோது எல்லாம் வரட்டும். எங்க போயிடப் போகுது’’ என்கிற அலட்சிய கர்வமும் கூடவே இருக்கும். உங்கள் ராசிக்கு ஆயுதத்தின் பெயருடைய நகரில் இருப்பது நல்லது. வில்லிவாக்கம், வேலாயுதம் நகர், தண்டபாணி தெரு, திரிசூலம் என்பதாக இருந்தால் முன்னேற்றம் எளிதாக இருக்கும்.

என்னதான் செவ்வாய் உதவினாலும் சொத்து வாங்குவது விற்பது என்றெல்லாம் பெரிதாக ஈடுபாடு காட்ட மாட்டீர்கள். ஏற்கனவே கட்டிய வீட்டை வாங்குவதைக் காட்டிலும், நீங்களே இடத்தை வாங்கிக் கட்டுங்கள். விரைவில் குடிபுகுவீர்கள்.தனுசு ராசிக்குள் மூலம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களும், உத்திராடம் நட்சத்திரத்தின் முதல் பாதமும் வருகிறது. முதலில் மூலம் நட்சத்திரத்தைப் பார்க்கலாம். ஞானகாரகனாகிய கேதுவின் ஆதிக்கத்தில் வருகிறது மூலம். மேலும் உங்கள் ராசிநாதனான குருவும் கேதுவும் அதிநட்பு கிரகங்களாகும். ‘‘சொந்தமா ஒரு வீடு இருந்தா நல்லது’’ என்று மட்டும் நினைப்பீர்கள். ‘‘சொந்த வீடுதான் என் லட்சியம்’’ என்றெல்லாம் சொல்ல மாட்டீர்கள். வீட்டிற்காக அகலக்கால் வைப்பது பிடிக்காது. சிங்கில் பெட்ரூமுக்கு பணத்தை வைத்துக்கொண்டு டபுள் பெட்ரூமுக்கு ஆசைப்பட மாட்டீர்கள். ‘‘எங்கிட்ட பத்து லட்சம் இருக்கு. இன்னொரு பத்து கொடுங்கன்னு தலையை சொறிஞ்சுகிட்டு யார்கிட்டயும் கேட்கறது எனக்குப் பிடிக்காது’’ என்று மறுத்து விடுவீர்கள். வீடு கட்ட வேண்டுமென்று தொடங்கி விட்டால் எல்லா மெட்டீரியல்களும் உயர்தரமாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பீர்கள். ‘‘நான் தனியா அமைதியா இருக்கும்படியா ஒரு ரூம் வேணும்’’ என்று கேட்டு கட்டிக் கொள்வீர்கள். பூஜையறைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள். தனியார் வங்கிக் கடனுக்கு முயற்சி செய்யுங்கள். உடனே கிடைக்கும். களர் மண், உவர் மண்ணாக இருக்கும் பூமி உங்களுக்கு நன்மையைத் தரும். ‘‘தனி வீடா இருக்கு.

யாரோட தொந்தரவும் அதிகமா இல்லை’’ என்று சொல்லி வீட்டை விற்பவர் ஆசை காட்டுவார். அதில் தவறில்லை. ஆனால், அந்த சொத்துப் பத்திரத்தில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பதை சோதித்தே வாங்குங்கள். வீட்டிற்கு அருகேயே பிள்ளையார் கோயில், சித்தர்களின் பெயரில் தெரு, ஜீவ சமாதிக்கு அருகே வீடு என்று வந்தால் உடனே வாங்குங்கள். பக்கத்திலேயே லேத் கம்பெனி, வெல்டிங், மெக்கானிக் ஷெட் என்று வந்தால் முடிந்தவரை தவிர்க்கப் பாருங்கள். கிழக்கு, வடகிழக்கு, தெற்கு திசைநோக்கி வீட்டின் தலைவாசல் இருப்பது நல்லது. ஊரின் இந்த திசைகளிலேயே வீடு இருப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். உங்களின் பால்ய வயதிலேயே சுக்கிர தசை நடப்பதால் 27 வயதுக்குள் வீடு அமையும். நீங்கள் படித்துக் கொண்டிருப்பின், உங்களின் அதிர்ஷ்டம் தந்தையாருக்கு சொத்து சேர்க்கைகளைக் கொடுக்கும். வாழ்வின் நிலையாமை குறித்துப் பேசுவீர்கள். அதனால், வாழ்க்கைத் துணையின் வற்புறுத்தலால்தான் வீடோ, நிலமோ வாங்குவீர்கள். மேலும், வாழ்க்கைத்துணையின் பெயரிலோ அல்லது பிள்ளைகளின் பெயரிலோ சொத்துகள் இருப்பது நல்லதாகும். முக்கியமாக ஏழரைச் சனியின்போது உங்கள் பெயரில் வாங்காதீர்கள். சென்ட்டிமென்டாக பூர்வீகச் சொத்துகளை விற்காமல் வைத்திருப்பீர்கள். இவ்வாறு பொத்திப் பொத்தி சொந்த ஊர் சொத்தை நீங்கள் வைத்திருப்பது வாழ்க்கைத்துணையின் கண்களை உறுத்தும். ‘‘அங்க யார் இருக்கா… என்ன பண்றாங்க? எதுக்கு அங்க சொத்து’’ என்று அவ்வப்போது டென்ஷன் ஏற்றுவார். அபார்ட்மென்ட் என்றால் எல்லா மாடிகளுமே உங்களுக்கு ஏற்றது. புதுமனை புகுவிழாவோ, பத்திரப் பதிவு செய்தலையோ ரோகிணி, ஹஸ்தம், சுவாதி, திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி போன்ற நட்சத்திரங்களில் வைத்துக் கொள்வது வளம் சேர்க்கும்.

அடுத்து பூராடம் நட்சத்திரம். கலை, காவியம் மற்றும் கட்டிடகாரகனான சுக்கிரன்தான் பூராடத்தை ஆட்சி செய்கிறார். எனவே, இந்த ராசியிலேயே பார்த்துப் பார்த்து வீடு கட்டுவது நீங்களாகத்தான் இருக்கும். ஆனாலும், உங்கள் ராசிநாதனான குரு கொஞ்சம் பகையாக வருவதால், வீடு என்றாலே தடைகள் பல தந்து சொந்த வீடு கனவு நிறைவேறும். மேலும், ‘‘ஸ்கூலுக்கு பக்கத்துலயே இந்த வீடு இருக்கு. ரொம்ப சத்தம் அதிகமா இருக்கும். வாங்காதீங்க’’ என்று சிலர் கூறுவார்கள். ‘‘ஸ்கூல் இருந்தா என்ன சார்? பரவாயில்லை. வாங்கிடுங்க’’ என்று சிலர் குழப்புவார்கள். இப்படி கேட்டுக் கேட்டே காலத்தைக் கடத்துவீர்கள். பிடித்தால் உடனே வாங்கும் வேலையில் இறங்கிவிட வேண்டும். இல்லாவிட்டால், ‘‘அந்த இடத்தை அப்பவே வாங்கியிருக்கலாம். இப்போ இந்த டொக்குதான் கிடைக்குது’’ என்று பின்னர் புலம்ப வேண்டியிருக்கும். ‘‘முற்றத்தோடு வீடு கட்டணும்னு ஆசை. இந்தக் காலத்துல முடியுமா. அதான் சிட்டியை விட்டு அம்பது கிலோமீட்டர் தள்ளி வீடு வாங்கியிருக்கேன்’’ என்று சொல்வீர்கள். கிராமத்தில் நவீன வசதிகளுடன் வீடு கட்டுவீர்கள். ஓட்டு வீடாக இருந்தாலும் அதில் ஏசி வைக்கலாமா என்று யோசிப்பீர்கள். நெரிசல் பகுதிகளை தவிர்ப்பீர்கள். பெரிய அபார்ட்மென்ட்களுக்கு அருகில் இடம் வந்தால்கூட வேண்டாம் என்று மறுத்து விடுவீர்கள். ஆனால், உங்கள் வீட்டுக்கு அருகில் கடைகள் இருந்தால் நல்லது என்று நினைத்துக் கொள்ளுங்கள். எம்.பி. வீடு, மாஜி மந்திரி என்று பலர் உங்கள் வீட்டிற்கு அருகில் இருப்பார்கள். வீட்டின் ஹால் பெரியதாக இருக்கும்படியாக அமைத்துக் கட்டுவீர்கள். உங்கள் சொந்த ஜாதகத்தில் சுக்கிரன் சரியில்லை எனில் பூர்வீகச் சொத்துகள் நிலைக்காது. அப்படி ஏதாவது இருந்தால் விற்க வேண்டுமென நினைப்பீர்கள்.

தென்கிழக்கு வாசல் பார்த்த வீடு அமைந்தால் அதிர்ஷ்டம். ஊரின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் வீடு அமைந்தால் வீட்டின் சௌபாக்கியம் பெருகும். வெண் மணல் உள்ள பூமி கிடைத்தால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கும். எந்தத் தளமாக இருப்பினும் பரவாயில்லை. வீட்டின் முகப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தோட்டத்திற்கு இடமே இல்லையென்றாலும் தொங்கும் தொட்டிகளில் செடிகளை நட்டு வைத்துப் பராமரிப்பீர்கள். கண்ணாடி அலங்காரங்களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். அஸ்வினி, புனர்பூசம், சித்திரை, மூலம், உத்திராடம் போன்ற நட்சத்திரங்களில் புதுமனை புகுவிழாவையும், பத்திரப் பதிவையும் வைத்துக் கொள்ளுங்கள். கட்டிய வீட்டை வாங்கும்போது அழகில் மயங்காது, பத்திரங்கள் பக்காவாக உள்ளதா என்று சோதித்து வாங்குங்கள். தனுசு ராசிக்குள் மூன்றாவதாக உத்திராடம் 1ம் பாதம் வருகிறது. உங்களின் ராசிக்கு அதிபதியான குருவும், உத்திராடம் நட்சத்திரத்திற்கு அதிபதியான சூரியனும் நெருங்கிய நண்பர்கள். அதனால் வீட்டைப்பற்றிய கவலையே வேண்டாம். ஆனால், மேற்கண்ட இரண்டு கிரகங்களும் கட்டிட ஸ்தானாதிபதியான சுக்கிரனுக்கு கொஞ்சம் பகை என்பதால், யாருடைய நெருக்கடிக்கும் பயந்து இடம் வாங்க மாட்டீர்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதைத்தான் செய்வீர்கள். ‘‘முதல்ல சின்ன வீட்டைக் கட்டிப்போம். அப்புறம் பார்த்துக்கலாம்’’ என்றெல்லாம் இருக்க மாட்டீர்கள். ‘‘வீடுங்கறது தலைமுறை தலைமுறையா தொடர வேண்டிய விஷயம்’’ என்று பெரிதாகவே கட்டுவீர்கள். பழைய சாமான்களை சேர்த்து வைப்பது பிடிக்காது. நிறைய ஜன்னல் வைத்து சூரிய ஒளி நிறையும்படி வீட்டை அமைப்பீர்கள். ஹாலுக்கு மேல் கண்ணாடி வைத்து சூரிய ஒளி உள்ளே புகும்படியான அமைப்பைச் செய்வீர்கள்.

பரமேஸ்வரன் தெரு, ராமலிங்கம் நகர், ராகவேந்திரா நகர் என்று சிவனின் பெயருள்ள நகர்களும், சித்தர்களின் பெயருள்ள தெருக்களும் உங்களுக்கு நன்மையைத் தருவதாக இருக்கும். தனியார் வங்கிக் கடனை இரண்டாம் பட்சமாக வையுங்கள். அரசு வங்கிக் கடன் உடனே கிடைக்கும். அபார்ட்மென்ட்டின் எல்லா தளங்களும் உங்களுக்கு சரியாக வரும். வீட்டின் தலைவாசலை எப்போதும் கிழக்கு, தெற்கு திசையில் வைத்துக் கட்டுங்கள். மேற்கு பார்த்த திசை ஆகாது. மேலும், ஊரின் கிழக்கு பக்கமாக வீடோ வெறும் நிலமோ வந்தால் வாங்கிப் போடுங்கள். எல்லாவித மண்ணும் நல்லதேயாகும். கண் மருத்துவமனை, ஆப்டிகல்ஸ், சித்த வைத்தியசாலை, யோகா சென்டர் போன்றவற்றிற்கு அருகில் வீடு அமைந்தால் நல்லது. அரசாங்க அலுவலகங்கள்அருகில் வீடு வந்தால் வாங்கிப்போடுங்கள். ரோகிணி, பூசம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம் போன்ற நட்சத்திரங்களில் கிரகப் பிரவேசமும், பத்திரப் பதிவையும் வைத்துக் கொள்ளுங்கள்.தனுசு ராசிக்கு வீடு கட்டும் அமைப்பைத் தருவதே மீன ராசியின் அதிபதியான குரு ஆவார். மீனம் என்பது கடல் ராசியாகும். எனவே, கடற்கரையில் பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் அருளும் தலத்தை தரிசிக்கும்போது நிச்சயம் நீங்கள் நினைக்கும் எண்ணம் வலுப்பெறும். செயல் திறனை அந்த ஆலயம் தூண்டும். சயனக் கோலத்தில் பாற்கடல் பெருமாளாக தரிசனம் தரும் ஆலயங்கள் உங்களுக்கு பொதுவாகவே நன்மை பயக்கும். அதிலும் கடற்கரையோரம் அருளும் பெருமாளாக இருப்பின் இன்னும் அதிக நற்பலன்களை அள்ளித்தரும். எனவே, மகாபலிபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்தல சயனப் பெருமாளை தரிசியுங்கள். எனக்கொரு நல்ல வீடு வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். விரைவில் வீடு கட்டுவீர்கள்!

 

The post தனுசு ராசிக்காரர்களின் இல்லக்கனவை நனவாக்கும் இறைவன் appeared first on Dinakaran.

Tags : SAGITTARIUS ,
× RELATED தனுசு