×

சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.850 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!!

சிகாகோ : சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.850 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க 17 நாட்கள் அரசுமுறைப் பயணமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும், ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகின. அதே போல் சிகாகோ நகரில் 200 கோடி ரூபாய் முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னையில் ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும், அஷ்யூரன்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், அமெரிக்காவின் சிகாகோ நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.850 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் ரூ.500 கோடி முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. விஷய் பிரிஷிஷன் நிறுவனத்துடன் ரூ.100 கோடி முதலீட்டில் காஞ்சிபுரத்தில் சென்சார்ஸ் மற்றும் டிரான்ஸ்டியூசர்ஸ் (Sensors and Transducers) 2 மையத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. விஸ்டியன் நிறுவனத்துடன் ரூ.250 கோடி முதலீட்டில் சென்னை மற்றும் கோவையில் மின்னணு உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.

The post சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.850 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!! appeared first on Dinakaran.

Tags : Chicago ,Chief Minister ,Fr. K. ,Stalin ,Chicago K. ,Tamil Nadu ,K. Stalin ,America ,San Francisco ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் போர்டு நிறுவனம்...