- ஜீரோ விபத்து தினம்
- ஆணையாளர்
- சுதாகர்
- சென்னை
- பூஜ்ஜிய விபத்து
- நகராட்சி போக்குவரத்து
- மாநகராட்சி
- பல்லவன் சாலை, சென்னை
- தின மலர்
சென்னை: ‘ஜீரோ விபத்து நாள்’ இலக்கை அடைய சென்னை மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்று போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பணிமனையில் நேற்று ‘ஜீரோ விபத்து நாள்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் கலந்து கொண்டு ‘ஜீரோ விபத்து நாள்’ லோகோவை வெளிட்டார். நிகழ்ச்சியில் மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் மாநகர போக்குவரத்து கழக டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இதுவரை விபத்துகள் ஏற்படுத்தாத மாநகர போக்குவரத்து கழக டிரைவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். பின்னர் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் பேசியதாவது: சென்னை போக்குவரத்து போலீசாரை பார்த்ததும் பொதுமக்களும் சரி, வாகன ஓட்டிகளும் சரி அனைவரும் திட்டுவது தான் வழக்கம். போக்குவரத்து போலீசாரை பார்த்ததும் சந்தோஷப்படுபவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
அது மாநகர போக்குவரத்து கழக டிரைவர்களாக இருந்தாலும் சரி, ஆட்டோ டிரைவராக இருந்தாலும் சரி. அதை மாற்ற முயன்று வந்தோம். இந்நிலையில், சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்த்தபோது, சென்னை… சென்னை… என்றும், தோனி…. தோனி…. என்றும் பயங்கர பாலோ அப் இருந்தது. சிஎஸ்கேவுக்கு இவ்வளவு பாலோவர் இருக்கும் போது, சென்னை மீது பொதுமக்கள் எவ்வளவு அன்பு வைத்திருப்பார்கள், என உணர முடிந்தது. எனவே, சென்னையை முன் மாதிரியான மாநகரமாக மாற்ற வேண்டும், என்று தோன்றியது. உலகத்தில் உள்ள எல்லா மாநகரங்களிலும் ஏதோ ஒரு சிறிய விபத்துகளாவது நடக்கும். விபத்துகள் நடக்காத ஊர் என்பதே கிடையாது. சென்னையில் ஏதோ ஒரு நாள், நாம் விபத்துகள் இல்லாமல் காண்பித்தால் அது தான் ‘ஜீரோ இஸ் குட்’ தினமும் காலையில் எழுந்து கேட்டால் விபத்தில் 2 பேர் இறந்துவிட்டார்கள், 3 பேர் இறந்துவிட்டார்கள் என்று கேட்கும் போது, அது மிகவும் மனதுக்கு கஷ்டமாக இருக்கும். இந்த நிலையை மாற்றினால் எப்படி இருக்கும், என திட்டமிட்டோம்.
இதில் நாங்கள் வெற்றி பெறலாம் அல்லது வெற்றி பெறாமலும் போகலாம். ஆனால் இது ஒரு முயற்சி. இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும் என்றால் சென்னையில் உள்ள அனைவரும் எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். சாலையில் பெரிய வாகனம் வருகிறது என்றால், அது மாநகர பேருந்து தான். அதனால் தான் முதலில் எம்டிசியில் இருந்து விழிப்புணர்வை தொடங்குகிறோம். எல்லோரும் போக்குவரத்து விதிகளை பின்பற்றினால் அபராதமே விதிக்க வேண்டிய அவசியம் இல்லை. போக்குவரத்து போலீசார் மீது குறை சொல்வதற்கு அவசியம் இருக்காது. இதுபற்றி 20 நாட்கள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். முதலில் மாநகர போக்குவரத்து கழகத்தில் ஆரம்பித்து இருக்கிறோம். அடுத்தது பள்ளிகளில் கவனம் செலுத்த உள்ளோம். அதன்படி 300 பள்ளிகளில் விழிப்புணர்வு நடத்த உள்ளோம்.
அதற்கு பிறகு ஐடி ஊழியர்கள், மருத்துவமனைகள், லாரி டிரைவர்கள், ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர்கள், பொதுமக்கள், லாரி மற்றும் மினி பேருந்து சங்கங்கள் என அனைவரிடம் இந்த 20 நாட்களில் விழிப்புணர்வு செய்ய உள்ளோம். ஆகஸ்ட் 26ம் தேதி சென்னைக்கு விபத்துகள் இல்லாத நாளாக கொடுக்க வேண்டும் என்று புதிய முயற்சியை எடுத்துள்ளோம். அதோடு இல்லாமல் இந்த 20 நாட்களில் ‘சிக்னல் கம்ப்லென்ட் டே’, அன்று யாரும் சிக்னல்களை மீறி வாகனம் ஓட்டாத படி நடவடிக்கை எடுக்கப்படும். ‘நோ செல்போன் டிரைவிங் டே’ அன்று யாரும் வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசாதபடி நடவடிக்கை எடுக்கப்படும். ‘ஹெல்மெட் கம்ப்லென்ட் டே’ அன்று தலைக்கவசம் அணிவதை உறுதி செய்யப்படும். இந்த மூன்று வாசகங்களை சென்னை மக்களிடம் நாங்கள் முன் வைக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
The post ‘ஜீரோ விபத்து நாள்’ இலக்கு வெற்றியடைய மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் வேண்டுகோள் appeared first on Dinakaran.