×

சேத்துப்பட்டு – ஸ்டெர்லிங் சாலை சந்திப்பில் மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு: நிர்வாகம் தகவல்

சென்னை: சேத்துப்பட்டு முதல் ஸ்டெர்லிங் சாலை வரை தோண்டப்பட்டு வந்த மெட்ரோ ரயில் சுரங்கப்பணி நிறைவு பெற்றதாக மெட்ரோ நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மெட்ரோ நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம் I மற்றும் கட்டம் I நீட்டிப்புக்கு பிறகு வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் II-ல் 116.1 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அதன்படி, 2ம் கட்ட திட்டத்தில் சுரங்கப்பாதை பணிகளுக்காக மொத்தம் 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதில், இரண்டாம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 3ல் மாதவரம் பால்பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி.மீ. நீளத்திற்கு 28 சுரங்கப்பாதை நிலையங்கள் மற்றும் 19 உயர்மட்ட நிலையங்களுக்கு, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகாமை, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய மேம்பாட்டு வங்கி போன்ற பன்னாட்டு நிதியுதவி நிறுவனங்களால் நிதி அளிக்கப்படுகிறது.

அந்தவகையில் வழித்தடம் 3ல் கெல்லீஸ் முதல் தரமணி வரையிலான 12 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு இதற்காக 8 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. சுரங்கம் தோண்டும் இயந்திரம் சிறுவாணி வழித்தடம் 3ல் கடந்தாண்டு செப்.9ம் தேதி சேத்துப்பட்டு நிலையத்திலிருந்து ஸ்டெர்லிங் சாலை சந்திப்பு வரை சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி 703மீ நீளமுள்ள சுரங்கப்பாதை பணியை முடித்து ஸ்டெர்லிங் சாலை சந்திப்பு நிலையத்தை தற்போது வந்தடைந்துவிட்டது.

இதில் கூவம் ஆற்றின் அடியில் 8.0 மீட்டர் ஆழத்தில் 51 மீட்டர் நீளத்தை வெற்றிகரமாக கடந்து சென்றுள்ளது. இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், டோனி புர்செல் (அணி தலைவர் – பொது ஆலோசகர்கள்), லத்தீப் கான் (தலைமை தட நிபுணர் – பொது ஆலோசகர்கள்), சஞ்சீவ்குமார் மண்டல் (தலைமை குடியுரிமை பொறியாளர் – பொது ஆலோசகர்கள்), ஜெயராமன் (திட்ட பொறுப்பாளர் – லார்சன் மற்றும் டூப்ரோ) சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பொது ஆலோசகர்கள் மற்றும் லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.

The post சேத்துப்பட்டு – ஸ்டெர்லிங் சாலை சந்திப்பில் மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு: நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chetupattu-Sterling road ,CHENNAI ,Sethupattu ,Sterling Road ,Metro Administration ,Chennai Metro Rail Project ,
× RELATED தனியார் கல்லூரி பஸ் மீது மோதிய அரசு...