×

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கு சி.விஜயபாஸ்கர், முன்னாள் போலீஸ் அதிகாரிகள் செப்.9ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ், ஒன்றிய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேர் செப்டம்பர் 9ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக டெல்லி சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே 2020 ஆண்டு மாதவராவ், உமா சங்கர் குப்தா உள்ளிட்ட 6 பேர் மீது சிபிஐ குற்றபத்திரிகை தாக்கல் செய்தது. தற்போது கூடுதல் குற்றபத்திரிகையில் ஒன்றிய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் சேஷாத்ரி, குல்சார் பேகம், அனீஷ் உபாத்யாய் வி.ராமநாதன், ஜோஸ் தாமஸ், செந்தில்வேலவன், முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், முன்னாள் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், கார்த்திகேயன், வி.சம்பத், ஏ.மனோகர், அ.பழனி கே.ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பெயர்களை சிபிஐ சேர்த்துள்ளது. இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சி.சஞ்சய் பாபா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் செப்டம்பர் 9ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். அன்றைய தினம் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஆஜரானால் கூடுதல் குற்றபத்திரிகை நகல் அவர்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post குட்கா முறைகேடு தொடர்பான வழக்கு சி.விஜயபாஸ்கர், முன்னாள் போலீஸ் அதிகாரிகள் செப்.9ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : C.Vijayabaskar ,Chennai Special Court ,CHENNAI ,P.V.Ramana ,DGP ,TK Rajendran ,Police Commissioner ,George ,Dinakaran ,
× RELATED நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான...