×

விவசாயிகள் நலன் கருதி நடப்பாண்டிலும் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும்: அமைச்சர் சக்கரபாணி

சென்னை: நெல் விவசாயிகள் நலன் கருதி நடப்பாண்டிலும் (2024-25) 1.9.2024 முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும். சன்னரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2450, பொதுரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2405 வழங்கப்படும் என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்

தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 2002-2003 காரிஃப் பருவம் முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முகவராகச் செயல்பட்டு ஒவ்வொரு பருவத்திலும் அக்டோபர் 1-ந் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. நெல் விவசாயிகள் நலன் கருதி முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதி அனுமதி பெற்றுத்தந்ததால் 2022-2023 காரிஃப் பருவத்திலிருந்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

2023 24 காரிஃப் பருவத்தில் 31.07.2024 வரை 3200 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3,85,943 விவசாயிகளிடமிருந்து 33,24,166 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 7,277.77 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பருவத்திற்கு சன்னரக நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதார விலையான ரூ.2320/- உடன் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ. 130/- சேர்த்து சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2450/- என்ற விலையிலும் பொதுரக நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதார விலை ரூ. 2300/- உடன் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ. 105/- சேர்த்து பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2405 என்ற விலையிலும் நெல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் விவசாயிகளுக்குத் தேவைப்படும் இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படும். ஆதலால், விவசாயிகள் 01.09.2024 முதல் புதிய கொள்முதல் விலையில் தங்களது நெல்லினை அரசு சார்பில் நடத்தப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்றுப் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

The post விவசாயிகள் நலன் கருதி நடப்பாண்டிலும் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும்: அமைச்சர் சக்கரபாணி appeared first on Dinakaran.

Tags : Minister ,Chakharapani ,Chennai ,Ministry of Food and Foodstuffs ,Chakarapani ,
× RELATED செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப...