×

வயநாடு நிலச்சரிவை பாடமாக எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன ?: தேசிய பசுமை தீர்ப்பாயம்

சென்னை : வயநாடு நிலச்சரிவு விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலம் வயநாட்டில் சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய இடங்களை நிலச்சரிவு புரட்டிப் போட்டது. இந்த நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 320 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 1000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 298 பேரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை. இதனிடையே தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து, வயநாடு நிலச்சரிவு தொடர்பாக வருத்தம் தெரிவித்ததுடன், வழக்குப்பதிவு செய்து விசாரணையை கையில் எடுத்துள்ளது.

இந்த வழக்கில் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு பிறப்பித்த உத்தரவில், “வயநாடு நிலச்சரிவு விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவிடுகிறோம். தமிழ்நாட்டில் எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு ஆணையிடுகிறோம். கோட்டயம், இடுக்கி, வயநாடு ஆகிய ஆட்சியர்கள், மீட்பு பணி மற்றும் சேத விவரங்கள் பற்றி அறிக்கையாக தாக்கல் செய்யுங்கள். இனி வரும் காலங்களில் இதுபோல் நடக்காமல் இருக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அறிக்கை அளிக்க வேண்டும்.

நிலச்சரிவு பகுதிகளில் உள்ள சுரங்கம், குவாரி, சாலை, கட்டுமான திட்டங்கள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். வயநாடு நிலச்சரிவை பாடமாக எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் எடுத்த முன்னெச்சரிக்கை பற்றி நீலகிரி, கோவை ஆட்சியர்கள், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை, தமிழ்நாடு வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை செயலாளர், தலைமைச் செயலாளர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வழக்கு விசாரணையை செப்டம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடுகிறோம், “இவ்வாறு தெரிவித்தனர்.

The post வயநாடு நிலச்சரிவை பாடமாக எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன ?: தேசிய பசுமை தீர்ப்பாயம் appeared first on Dinakaran.

Tags : Wayanad ,Tamil Nadu ,National Green Tribunal ,Chennai ,South Zone National Green Tribunal ,Kerala government ,Suralmalai ,Mundakai ,Meppadi ,Dinakaran ,
× RELATED விநாயகர் சிலை கரைக்க கட்டணம் சட்ட நடைமுறை தேவை