×

அம்மன் – அபூர்வ தகவல்கள்

சாகம்பரி தேவி மந்திர்

சாகம்பரி தேவியின் திருக்கோயில் ஷகரான்பூரில் அமைந்துள்ளது. இரண்டு மலைக் குன்றுகளுக்கு நடுவில் பசுமை சூழ்ந்த இயற்கைச் சூழலில் அமைந்துள்ள இத் திருக்கோயிலில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர். ஆண்டுதோறும் ஆச்வின மாதத்தில் நான்கு நாட்கள் நடைபெறும் திருவிழா மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் போது இந்தப் பிரதேசத்தில் விளையும் ‘சாரல்’ என்ற பழம் பக்தர்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது.

இந்த பழம் மருத்துவ குணம் கொண்டதாகவும் கருதப்படுகிறது. சாஸ்திரப்படி இத்திருக்கோயிலில் குடி கொண்டுள்ள ஸ்ரீசாகம்பரி தேவி, மிகவும் கருணை மிக்கவள். தன்னை பக்தியுடன் அணுகுவோர்க்கு வேண்டியதனைத்தையும் தருபவள். நாமும் சென்று அவளை தரிசித்து அவள் அருள் பெறுவோம்.

அந்தியூர் ஸ்ரீபத்ரகாளி அம்மன்

இந்த பத்ரகாளியம்மன் கோயில் இரண்டாயிரம் வருடம் பழமையானது. கனவில் வந்து அம்மன் பலன் சொல்வது இப்பகுதி பக்தர்களின் அனுபவம். கோயிலில் அம்மன் தலையில் பூ வைத்து வாக்கு கேட்பதும் நடைபெறுகிறது. போரில் வெற்ற பெற இந்தக் காளியிடம் பிரார்த்திக்கும் வீரர்கள், பிரார்த்தனை நிறைவேறிய பின் தம்மையே பலியிட்டுக் கொள்ளும் வழக்கம் இருந்தது. இக்கோயிலில் தமது தலைகளை தாமே வெட்டிக்கொள்ளும் சில படிமங்கள் காணப்படுகின்றன. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களின் குலதெய்வமாக பத்ரகாளி அம்மன் விளங்குகிறாள். ஈரோட்டிலிருந்தும் பவானியிலிருந்தும் அடிக்கடி பேருந்து வசதிகள் உண்டு.

கண்ணூர்பட்டி- ஆதி பராசக்தி

ஸ்ரீபெரியாண்டவர் கோயில் மகிமை வாய்ந்த ஒரு சக்தி ஸ்தலம். இந்தக் கோயில் தமிழ் நாட்டில் சேலத்திலிருந்து நாமக்கல் செல்லும் நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் என்னும் ஊரிலிருந்து கிழக்கு திசையில் சுமார் 2 மைல் தொலைவில் அமைந்திருக்கும் கண்ணூர்ப்பட்டி என்னும் அழகிய கிராமத்தில் உள்ளது. இக்கோயிலில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீஅம்பாள் ஆதி பராசக்தியின் அம்சமாகும். இந்த அம்பாளுக்கு ‘ஸ்ரீ வனதுர்கா பரமேஸ்வரி’ என்றும் ‘ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி’ என்றும் பெயர்கள்.

ஆனால் வழக்கில் அனைவரும் அன்னையை ‘ஸ்ரீ பெரியாண்டவர்’ என்றே அழைக்கின்றனர். இக்கோயிலில் ஆதிபராசக்தி கடும் உக்ரமும் மஹா கோபமும் பொருந்தியவளாய் விளங்குகிறாள். தீய சக்திகளை நாசமாக்கி விடும் பெரும் சக்தி கொண்ட தெய்வீக யந்த்ரங்கள் இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. ஸ்ரீபெரியாண்டவர் கோயில் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. வேறெங்குமே இம்மாதிரி அமைப்பும் தெய்வீக சக்தியும் கொண்ட கோயில் கிடையாது என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.

மரகத அம்மன்கள்

மதுரை மீனாட்சி அம்மனும் சென்னை அருகேயுள்ள சிறுவாபுரி உண்ணாமலை அம்மனும் மரகதக் கல்லால் ஆனவர்கள். இத்தகைய மரகத அம்மன்களை வணங்கினால், புதன் கிரகத்தின் அருள் கிடைத்து கல்வியும் ஞானமும் வளரும் என்பது ஐதீகம்.

108 இனிப்பு

தஞ்சாவூர் மாவட்டம், திருநெய்தானம் என்ற இடத்தில் நெய்யாடியப்பர் கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ‘இளமங்கை அம்மன்’ என்ற பெயரில் அம்பாள் அருள்புரிந்து வருகிறாள்.
இந்தக் கோயிலில் அமாவாசையன்று நூற்றி எட்டு எண்ணிக்கையில் இனிப்பு படையல் வைக்கப்படுகிறது. அபிராமி அந்தாதியின் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு இனிப்பு என்ற ரீதியில் அம்மனுக்கு இனிப்பு படையல் போட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

சிலிர்க்க வைக்கும் தீவட்டி ஊர்வலம்

புதுக்கோட்டையிலிருந்து 35 கி.மீ. தொலைவில் பொன்னமராவதி மார்க்கத்தில் உள்ளது கொன்னையூர். இங்குள்ள முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனி மாதம் 15 நாட்கள் திருவிழா நடைபெறும். அப்போது அம்மன் தினசரி இரவில் வீதியுலா வருவார். ஆயிரக் கணக்கான ஆண்களும், பெண்களும் வரிசையாக அணிவகுத்து நின்று அம்மனுக்கு தீவட்டி பிடிப்பார்கள். பக்தர்கள் வரிசையாக தீவட்டி பிடித்துவர அம்மன் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சியாகும். இந்த தீவட்டி பிடிக்கும் வேண்டுதல் இந்தியாவில் வேறு எந்தக் கோயிலிலும் நடைபெறுவது இல்லை. கோயில் தோன்றிய காலம் முதல் இன்று வரை தொன்று தொட்டு இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

நாகலட்சுமி

The post அம்மன் – அபூர்வ தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Amman ,Sagambari Devi ,Mandir ,Sagambari ,Devi ,Shakaranpur ,Ashwina ,
× RELATED சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன்...