×

பச்சைமலையில் விடியல் பயணம் திட்டம் வாயிலாக மலைவாழ் மக்கள் பயன்பெற சிறப்பு பஸ்

திருச்சி, ஆக.2: மலைவாழ் மக்கள் பயன்பெற சிறப்பு பேருந்து சேவையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து நேற்று துவக்கி வைத்தார். திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில் பச்சைமலை அமைந்துள்ளது. இம்மலையானது தென்புறநாடு, வண்ணாடு மற்றும் கோம்பை ஆகிய மூன்று ஊராட்சிகள் உள்ளடக்கி 53 மலை கிராமங்களில் சுமார் 11094 (ஆண்கள் 5711, பெண்கள் 5383) மலைவாழ் பழங்குடியினர்கள் வசித்து வருகின்றனர். மேற்கண்ட பச்சைமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட்., திருச்சி மண்டலம் மூலம் 5 புறநகரப் பேருந்துகளும் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிட்., சேலம் மண்டலம் மூலம் 1 புறநகரப் பேருந்தும் ஆக மொத்தம் 6 புறநகரப் பேருந்துகள் (173” Short Wheel Base) மற்றும் 36 + 2 இருக்கைகளுடன் கூடிய புறநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இப்பேருந்துகளில் 4 பேருந்துகள் கூண்டு புணரமைக்கப்பட்டு புதுபொலிவுடன் இயக்கப்பட்டும், மீதமுள்ள 2 பேருந்துகள் கூண்டுகட்டுமான பணிகள் முடிவுற்று இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்படுகிறது. தென்புறநாடு ஊராட்சிக்குட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் திருச்சி மண்டலம் உப்பிலியபுரம் கிளையின் மூலம் 3 புறநகரப் பேருந்துகள் தினசரி 30 நடைகளும், சேலம் மண்டலம், ஆத்தூர் கிளையின் மூலம் 1 புறநகரப் பேருந்து தினசரி 6 நடைகளும் ஆக மொத்தம் 4 புறநகரப் பேருந்துகள் மூலம் தினசரி 36 நடைகள் இயக்கம் செய்யப்படுகிறது. இதன் மூலம் (ஆண்கள் 2247, பெண்கள் 2187) ஆக மொத்தம் 4434 மலைவாழ் பழங்குடியினர்கள் பயன்பெறுகின்றனர். வண்ணாடு மற்றும் கோம்பை ஊராட்சிக்குட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் திருச்சி மண்டலம் துறையூர் கிளை 2 புறநகரப் பேருந்துகள் மூலம் தினசரி 24 நடைகளும், உப்பிலியபுரம் கிளை 1 புறநகரப் பேருந்தின் மூலம் தினசரி 4 நடைகளும் ஆக மொத்தம் 3 புறநகரப் பேருந்துகள் மூலம் தினசரி 28 நடைகள் இயக்கம் செய்யப்படுகிறது.

மேலும், இதன் மூலம் வண்ணாடு ஊராட்சியில் (ஆண்கள் 2171, பெண்கள் 1993) ஆக மொத்தம் 4164 மற்றும் கோம்பை ஊராட்சியில் (ஆண்கள் 1293, பெண்கள் 1203) ஆக மொத்தம் 2496 மலைவாழ் பழங்குடியினர்கள் பயன்பெறுகின்றனர். தமிழ்நாடு அரசின் மகளிர் அரசு நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய நடைமுறையில் உள்ள ”விடியல் பயணம் திட்டம்” மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் மலை வழித்தட புறநகரப் பேருந்துகளில் மலைப்பகுதியில் மட்டும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தும் வகையில், நேற்று புத்தூர் மலைகிராமத்தில் நடந்த நலத்திட்ட விழாவில் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தினால் பச்சைமலை கிராமங்களில் வசிக்கும் சுமார் 5383 பெண்கள் அரசு மலைவழித்தட புறநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் சலுகையினை பெற்று பயனடைய உள்ளனர். புத்தூர் திடலில் நடந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை பொது மேலாளர் (திருச்சி மண்டலம்)முத்துகிருஷ்ணன், பொது மேலாளர் முகம்மது நாசர்(கூட்டான்மை தொழில்நுட்பம்) துணை மேலாளர்கள் புகழேந்திராஜ்(வணிகம்) கார்த்திகேயன்(தொழில்நுட்பம்) ரெங்கராஜன் (கூட்டாண்மைமனித வள மேம்பாடு) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post பச்சைமலையில் விடியல் பயணம் திட்டம் வாயிலாக மலைவாழ் மக்கள் பயன்பெற சிறப்பு பஸ் appeared first on Dinakaran.

Tags : Pachaimala ,Trichy ,Minister Assistant Minister ,Stalin ,Thuraiur ,Southern Nadu ,Vannadu ,Gomba ,
× RELATED திருச்சி என்.ஐ.டி. விடுதியில்...