×

கல்வி, வேலைவாய்ப்பில் எஸ்சி, எஸ்டி.க்கு உள்ஒதுக்கீடு செல்லும்: மாநிலங்களுக்கே அதிகாரம் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு

எஸ்.சி, எஸ்டி இடஒதுக்கீட்டிலும் கிரீமிலேயர்

தலைமை நீதிபதி மற்றும் 6 நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், எஸ்.சி, எஸ்டி பிரிவினரிடையே கிரீமிலேயரை அடையாளம் காணவும், இடஒதுக்கீட்டிலிருந்து அவர்களை வெளியேற்றவும் ஒரு கொள்கையை அரசு உருவாக்க வேண்டும். உண்மையான சமத்துவத்தைப் பெறுவதற்கான ஒரே வழி அது மட்டுமே ஆகும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

புதுடெல்லி,ஆக.2: கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் பட்டியலின (எஸ்சி, எஸ்டி) பிரிவினர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு முழு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில், வால்மீகி மற்றும் மழாபி சீக்கிய சமூகத்தினருக்கு 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் வகையில், பஞ்சாப் பட்டியலின மற்றும் பின்தங்கிய வகுப்பினருக்கான அரசு வேலைவாய்ப்புகள் இடஒதுக்கீடு சட்டம் 2006 என்ற சட்டத்தை நிறைவேற்றியது. இதையடுத்து இந்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், ‘‘அரசு வேலை வாய்ப்புகளில் எஸ்.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் மாநில அரசு ஐந்து சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், அதேப்போன்று 2004ம் ஆண்டில் ஈ.வி.சின்னையா மற்றும் ஆந்திர மாநில அரசுக்கு இடையேயான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை மீறும் செயல் என்று தெரிவித்து,’பஞ்சாப் பட்டியலின மற்றும் பின்தங்கிய வகுப்பினருக்கான அரசு வேலைவாய்ப்புகள் இடஒதுக்கீடு சட்டம் 2006 சட்டத்தை ரத்து செய்து அப்போது உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இதையடுத்து மேற்கண்ட வழக்கில் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக பஞ்சாப் மாநில அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத், பெலா.எம்.திரிவேதி, பங்கஜ் மித்தல், மனோஜ் மிஸ்ரா, சதீஷ் சந்திர மிஸ்ரா ஆகிய ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் மனுதாரராக இணைக்கப்பட்ட தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சேகர் நாப்தே, பூர்ணிமா கிருஷ்ணமூர்த்தி மற்றும் எம்.எப்.பிலிப் ஆகியோர் வாதத்தில், ‘‘உள்இடஒதுக்கீடு என்பது மிகவும் பின்தங்கிய பிரிவினர்களுக்கு வாய்ப்பு தர அரசு தரப்பில் எடுக்கப்பட்ட சமூகநல நடவடிக்கை ஆகும். குறிப்பாக எஸ்சி பட்டியலில் இடம் பெற்றுள்ள சாதிகள் அனைத்தும் ஒரே மாதிரியான நிலையில் இல்லை. அது பன்முகத்தன்மை கொண்டதாகும். எஸ்சிக்குள் சில பிரிவுகள் மற்றவற்றை விட மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளன.

குறிப்பாக அருந்ததியர்களின் பிந்தங்கிய நிலையை கண்டறிய அனுபவ தரவுகளை கண்டறிய நீதிபதி ஜனார்த்தனம் கமிஷன் அமைக்கப்பட்டது. கமிஷன் தரப்பில் சமர்பிக்கப்பட்ட அறிக்கை அடிப்படையில் தமிழ்நாட்டில் அருந்ததியர்களுக்கு எஸ்.சி இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதற்காக கடந்த 2009ல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதில் தலையிட நீதிமன்றங்களோ அல்லது ஒன்றிய அரசுக்கோ அதிகாரம் கிடையாது என்று தெரிவித்தனர். ஆனால் இதையடுத்து மனுதாரர்கள் வாதங்களுக்கு எதிர்மனுதாரர் மற்றும் ஒன்றிய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த இரு மாதங்களுக்கு முன்னதாக ஒத்திவைத்திருந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத், பங்கஜ் மித்தல், மனோஜ் மிஸ்ரா, சதீஷ் சந்திர மிஸ்ரா ஆகியோர் ஆறு நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒருமித்த தீர்ப்பையும், அதேநேரத்தில் நீதிபதி பெலா.எம்.திரிவேதி மாறுபட்ட தீர்ப்பையும் நேற்று வழங்கியுள்ளனர்.

இதையடுத்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உட்பட ஆறு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், ‘‘பஞ்சாப் மாநிலத்தில் அரசு வேலை வாய்ப்புகளில் பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில், வால்மீகி மற்றும் மழாபி சீக்கிய சமூகத்தினருக்கு 50சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் விதமாக மாநில அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும். இதுபோன்ற உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. இது மாநில அரசின் கொள்கை சார்ந்த ஒன்று என்பதால், உச்ச நீதிமன்றம் தலையிட்டு எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது. பஞ்சாப் அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்கிறது. அதே நேரத்தில் ஈ.வி.சின்னையாவின் முந்தைய முடிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்கிறது. குறிப்பாக எஸ்.சி மற்றும் எஸ்டி பிரிவினர்கள் எதிர்கொள்ளும் முறையான பாகுபாடுகளின் காரணத்தை அடிப்படையாக வைத்து தான் இதுபோன்ற சட்டம் மாநிலங்களால் உருவாக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டவிதி 14, இதுபோன்ற துணை வகைப்பாட்டை அனுமதிக்கிறது. மேலும் இந்த சட்டம் என்பது பிரிவு 341(2) சட்டவிதிகளை கண்டிப்பாக மீறாது.

பொருளாதாரத்திலும் இதுபோன்ற பிரிவினர் மிகவும் பின் தங்கி உள்ளனர் என்பதை கருத்தில் கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. சமூகத்தின் ஜனநாயகம் இல்லாதவர்களுக்கு, அரசியல் ஜனநாயகம் கொடுப்பதால் மட்டும் எந்த பயனும் அவர்களுக்கு கிடையாது. ஈ.வி.சின்னையா தரப்பின் உத்தரவு என்பது ஒரு தவறான முடிவாகும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் எஸ்.சி, எஸ்.டி ஆகியோர்களுக்கு மத்தியில் ஒருசிலர் மட்டும் பலன்களை அடைகிறார்கள் என்றால் மாநில அரசுகள் தலையிட்டு இதுபோன்ற சட்டங்களை கொண்டு வரலாம். அதற்கான அதிகாரம் அவர்களுக்கு உண்டு. மேலும் இந்த வழக்கின் விசாரணையின் போது டாக்டர் அம்பேத்கர் கொடுத்த சட்டவிதிகள் அனைத்தையும் முழுமையாக நாங்கள் ஆராய்ந்தோம். அதன் பின்னர் தான் தீர்ப்பு எழுதப்பட்டது. மேலும் குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்பட்ட பட்டியலிடப்பட்ட சாதி ஒரு பன்முக வர்க்கம் என்பதை வரலாற்றுச் சான்றுகள் மூலம் நிறுவியுள்ளோம். அதாவது சட்டப்பிரிவு 15, 16 மற்றும் 341ல் வேறுபாட்டிற்கான பகுத்தறிவு மற்றும் அடைய விரும்பும் பொருளுக்கு ஒரு பகுத்தறிவு இணைப்பு இருந்தால், எஸ்.சிபிரிவில் துணை வகைப்படுத்தலைத் தடுக்க எதுவும் தடையாக இல்லை. மாநிலங்களுகு இடையில் பிற்படுத்தப்பட்ட நிலையைத் தீர்ப்பதற்கு எந்த நடவடிக்கையை வேண்டுமானாலும் அவர்கள் எடுக்கலாம்.

அதற்கு எந்த தடையும் கிடையாது. சில வகுப்பினரின் போதிய பிரதிநிதித்துவத்திற்கு மாநில அரசு துணை வகைப்படுத்தலாம். ஒரு வர்க்கம் எதிர்கொள்ளும் போராட்டங்கள் குறைந்த தரங்களில் அது பெறும் பிரதிநிதித்துவத்துடன் மறைந்து விடாது. அரசியலமைப்புச் சட்டமே எஸ்சி, எஸ்டியை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அங்கீகரிக்கும் போது, இந்த வகுப்பினருக்கான உறுதியான நடவடிக்கைக்கான அளவுகோல்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டதாக தான் இருக்கும் என்று ஆறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதையடுத்து நீதிபதி பி.எம்.திரிவேதி வழங்கிய மாறுபட்ட தீர்ப்பில், சமத்துவம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். அதில் பாகுபாடு காட்டக் கூடாது. அதனால் இந்த வழக்கில் ஆறு நீதிபதிகள் வழங்கிய உத்தரவை நான் எதிர்க்கிறேன். இதுபோன்ற உள்ஒதுக்கீடு சட்டங்களை கொண்டு வருவதற்கு மாநிலங்களுக்கு எந்தவித அதிகாரமோ அல்லது தகுதியோ கிடையாது என தெரிவித்தார்.

இருப்பினும் பெருமான்மையான நீதிபதிகள் ஒருமித்த உத்தரவை பிறப்பித்துள்ளதால் பஞ்சாப் அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்பதும், அரசு வேலை வாய்ப்புகளில் பட்டியலின பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு என்பதும் தற்போது தெளிவாகியுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் கடந்த 2009ல் கலைஞர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அருந்ததியர் 3 சதவீத உள் ஒதுக்கீடு சட்டம் செல்லும்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெருமகிழ்ச்சி அளிக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்
சென்னை: அருந்ததியர் சமுதாயத்திற்கான 3% உள்ஒதுக்கீட்டை அங்கீகரித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்திருப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் நமது திராவிட மாடல் பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்பு அமைந்திருக்கிறது. முறையாக குழு அமைத்து, அதன்மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்டு அருந்ததியர் சமுதாயத்திற்கான 3% உள்ஒதுக்கீட்டை கலைஞர் கொடுக்க – அதற்கான சட்ட முன்வடிவை பேரவையில் நான் அறிமுகம் செய்து நிறைவேற்றி தந்தோம். இந்த சட்டத்தை உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்திருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது.

The post கல்வி, வேலைவாய்ப்பில் எஸ்சி, எஸ்டி.க்கு உள்ஒதுக்கீடு செல்லும்: மாநிலங்களுக்கே அதிகாரம் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Chief Justice ,Kremlin ,Kremillians ,Dinakaran ,
× RELATED போலி என்.சி.சி. முகாமில் பாலியல் தொல்லை...