×

தமிழ்நாடு  அரசுப்  பணியாளர்  தேர்வாணையம்  மூலம் 780 தணிக்கையாளர்  பணியிடங்களுக்கு தெரிவு  செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன  ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (1.8.2024) தலைமைச் செயலகத்தில், நிதித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் தணிக்கைத்துறைகளில் கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், உதவி ஆய்வாளர் மற்றும் உதவி தணிக்கை ஆய்வாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 780 நபர்களுக்கு  பணிநியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக 20 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
நிதித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு தணிக்கைத் துறையில் 7 கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர் பணியிடங்களும், 928 இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணியிடங்களில் முதற்கட்டமாக 700 இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணியிடங்களும், உள்ளாட்சி நிதி தணிக்கை துறையில் 43 உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களும் மற்றும் இந்து சமய அறநிலைய  நிறுவனங்களின் தணிக்கைத் துறையில் 30 உதவி தணிக்கை ஆய்வாளர் பணியிடங்களும், என மொத்தம் 780 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இளநிலை கூட்டுறவுத் தணிக்கையாளரின் முக்கிய பணி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட அனைத்து கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளை தணிக்கை செய்தல்,  வரவினமாக உள்ள கடன், அசல், வட்டி போன்ற இனங்கள் உரிய முறையில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வதாகவும். இந்து சமய அறநிலைய நிறுவனங்களின் தணிக்கை ஆய்வாளர்  பணியானது, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அறநிலைய நிறுவனங்களின் பொது கணக்கு, அன்னதான கணக்கு, திருப்பணி மற்றும் இதர வரவு-செலவு கணக்குகள் மீது தணிக்கை மேற்கொண்டு இந்து சமய அறநிலைய சட்ட விதிகளுக்குட்பட்டு வரவு-செலவுகள்  மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதி செய்வதாகும்.
உள்ளாட்சி நிதி தணிக்கை துறையின் உதவி ஆய்வாளர் பணியானது, உள்ளாட்சி நிறுவனங்களின் கணக்குகளைச் சரிபார்த்தல், வரவு செலவுகள் முறையாக உள்ளனவா என்பதையும், வரவு செலவுகள் சம்பந்தப்பட்ட சட்டத்திற்குட்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவா என்பதையும் உறுதி செய்தல், அரசு மற்றும் பிற நிதி உதவி அளிக்கும் நிறுவனங்கள் வழங்கும் நிதி வழங்கப்பட்ட காரணங்களுக்காக முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதாகும்.
புதிதாக நியமனம் பெற்றுள்ள  தணிக்கையாளர்களுக்கு சென்னை, மதுரை, கோவை, தஞ்சாவூர் மற்றும் தூத்துக்குடியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் தணிக்கைப்பணி தொடர்பான முழுமையான பயிற்சி வழங்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  இந்நிகழ்ச்சியில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன், இ.ஆ.ப., நிதித்துறை செயலர் (செலவினம்) எஸ். நாகராஜன், இ.ஆ.ப., தலைமை தணிக்கை இயக்குநர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன், இ.ஆ.ப., கூட்டுறவு தணிக்கைத்துறை இயக்குநர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாடு  அரசுப்  பணியாளர்  தேர்வாணையம்  மூலம் 780 தணிக்கையாளர்  பணியிடங்களுக்கு தெரிவு  செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன  ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.U. ,Tamil Nadu Public Personnel Selection Board ,K. Stalin ,Chennai ,Chief Minister of ,Tamil ,Nadu ,Assistant ,Audit ,Tamil Nadu Government ,Tamil Nadu Government Personnel Selection Board ,Dinakaran ,
× RELATED மணிப்பூர்; முன்னாள் முதலமைச்சர்...