×

பைனான்ஸ் நிறுவனங்களில் கடன் வாங்கி மோசடி

சேலம், ஆக. 1:சேலம் அருகே தங்களது பெயரில் பைனான்ஸ் நிறுவனங்களில் கடன் பெற்று மோசடி செய்ததாக, சத்துணவு பணியாளர் மீது கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த உமையாள்புரம் பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:  மகளிர் சுயஉதவி குழுவில் உள்ள பெண்கள், ஆத்தூர் பகுதிகளில் உள்ள சிறு பைனான்ஸ் நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளோம். எங்களது பகுதியைச் சேர்ந்த சத்துணவு பணியாளர் ஒருவர், பைனான்ஸ் நிறுவனங்களுடன் தொடர்பில் இருந்து, கடன் ெபற்றுத்தந்தார். பின்னர் எங்களது பெயரில் கடன் எடுத்து கொடுத்தால், தான் தவணைத்தொகையை கட்டிக் கொள்வதாக தெரிவித்தார். இதனை நம்பிய பலரும் ₹10 ஆயிரம் முதல் ₹1 லட்சம் வரை கடன் எடுத்துக் கொள்ள அனுமதித்தனர்.

இக்கடன்களுக்கு ஓரிரு மாதங்கள் தவணை செலுத்திய அவர், அதன்பின்னர் எந்தவொரு கடனையும் கண்டுகொள்ளவில்லை. அந்த கடன்கள் எங்களது பெயரில் இருப்பதால், பைனான்ஸ் நிறுவனத்தினர் தவணைத் தொகை கேட்டு மிரட்டுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட சத்துணவு பணியாளரிடம் கேட்டால், உரிய பதில் அளிக்காமல் அலைக்கழிப்பு செய்கிறார். இதனால் கடும் மன உளைச்சலில் சிக்கி தவிக்கிறோம். எனவே இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து, அந்த பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post பைனான்ஸ் நிறுவனங்களில் கடன் வாங்கி மோசடி appeared first on Dinakaran.

Tags : Salem ,Umaiyalpuram ,Pethanayakkanpalayam ,Salem district ,Dinakaran ,
× RELATED போலி பத்திரப்பதிவு குறித்து...