×

கிணறு வெட்டும்போது ரோப் அறுந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கிணறு வெட்டும்போது இரும்பு ரோப் அறுந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது அருங்குருக்கை கிராமம். இந்த கிராமம் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. இங்கு கண்ணன் (62) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றை ஆழப்படுத்தும் பணி கடந்த 10 நாட்களாக நடந்து வந்தது. இந்த பணியை தணிகாசலம் (48), ஹரி கிருஷ்ணன் (40), முருகன் (38) ஆகியோர் மேற்கொண்டு வந்துள்ளனர்.இந்த நிலையில், நேற்றிரவு சுமார் 8 மணியளவில் மீண்டும் கிணறு ஆழப்படுத்தும் பணி நடந்தது. பின்னர், கிரேனில் இணைக்கப்பட்டிருந்த மண் அள்ளும் பக்கெட் மீது உட்கார்ந்து கொண்டு கிணற்றுக்கு மேலே வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இயந்திரத்தின் இரும்பு ரோப்பானது அறுந்து 100 அடி ஆழ கிணற்றில் மூவரும் விழுந்துள்ளனர்.

இதில் 3 பேரும் உடல் முழுவதும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த அவர்களது உறவினர்கள் மூவரது உடலையும் கிணற்றிலிருந்து மேலே எடுத்து வந்து கிடத்தி உயிரிழப்பிற்கு காரணமான பொக்லைன் இயந்திரத்தின் ஓட்டுனர், நிலத்தின் உரிமையாளர் மற்றும் இவர்களை இந்த பணிக்கு அழைத்து வந்த நபர் என 3 பேரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறி கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த தணிகாசலம், ஹரி கிருஷ்ணன், முருகன் ஆகிய 3 பேரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, இறந்த 3 பேரின் உறவினர்களும் ரோப் அறுந்து விழுந்ததில் இவர்கள் இறக்கவில்லை, கிணற்றை ஆழப்படுத்த சட்டத்திற்கு புறம்பாக ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்தி உள்ளனர். அதில் வெடிப்பு ஏற்பட்டு அதன் மூலமாக இவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ் நேரில் வந்து இறந்தவர்களின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் குற்றம் சாட்டப்பட்ட 3 நபர்களையும் பிடித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து 3 பேரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப அவர்களது உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். சுமார் ஒரு மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர் 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கிணறு தூர்வாரும் பணியில் ஈடுபட்ட 3 பேர் உயிரிழந்த சம்பவம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

The post கிணறு வெட்டும்போது ரோப் அறுந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Arungurukkai ,Thiruvenneynallur ,Villupuram district ,Kallakurichi district ,
× RELATED கண்டாச்சிபுரம் தாலுகா ஆபிசில் லஞ்ச...