×

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு: 2327 பதவிக்கு 7.90 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ பணியில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 20ம் தேதி வெளியிட்டது. இதில் குரூப் 2 பணியில் தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு உதவியாளர், சென்னை மாநகர காவல் தனிப்பிரிவு உதவியாளர் உள்பட 507 இடங்கள் நிரப்பப்படுகிறது. குரூப் 2’ஏ’ பணியில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரின் நேர்முக உதவியாளர், கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளர், உள்ளாட்சி நிதித் தணிக்கை உதவி ஆய்வாளர் என 48 துறைகளில் 1820 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இத்தேர்வுகளுக்கு அறிவிப்பு வெளியிட்ட அன்றே இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதாவது இளங்கலை படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இத்தேர்வுக்கு இளங்கலை பட்டதாரிகள் மட்டுமின்றி, முதுநிலை பட்டதாரிகள், இன்ஜினியர் என்று போட்டி போட்டு விண்ணப்பித்து வந்தனர். இந்த நிலையில் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட ஒரு மாதம் காலம் அவகாசம் கடந்த 19ம் தேதி நள்ளிரவு 11.59 மணியுடன் முடிவடைய இருந்தது. ஆனால், தொழில்நுட்ப காரணங்களினால் இணைய வழியாக விண்ணப்ப கட்டணம் செலுத்த முடியவில்லை என்று தேர்வர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கும் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கும் நேற்று நள்ளிரவு 11.59 மணி வரை ஒரு நாள் கால அவகாசத்தை நீட்டித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ் அறிவிப்பு வெளியிட்டார். இதைத் தொடர்ந்து நேற்று அதிக அளவிலான பட்டதாரிகள் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். ெதாடர்ந்து விண்ணப்பதற்கான கால அவகாசம் நேற்று நள்ளிரவு 11.59 மணியுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து குரூப் 2, குரூப் 2ஏ பணிக்கு இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், இன்ஜினியர், டாக்டர்கள் என 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஒரு பதவிக்கு 340 போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தொடர்ந்து குரூப் 2, குரூப் 2ஏ பதவிக்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14ம் தேதி நடக்கிறது. இதில் வெற்றி பெறுவோர் அடுத்தக்கட்டமாக மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

The post டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு: 2327 பதவிக்கு 7.90 லட்சம் பேர் விண்ணப்பம் appeared first on Dinakaran.

Tags : TNPSC Group 2 ,Chennai ,Tamil Nadu Public Service Commission ,TNPSC ,2A ,Dinakaran ,
× RELATED குரூப்-2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு