மும்பை: இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்த தொடர் புதிய பயிற்சியாளர் கவுதம் காம்பீருக்கு முதல் தொடர் என்பதால், அவரின் அணுகுமுறை மற்றும் திட்டங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இதனிடையே இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி தேர்வு குழுவினரால் இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது. அதேபோல் ஒருநாள் தொடரில் நட்சத்திர வீரர்களான விராட் கோஹ்லி, பும்ரா மற்றும் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் சீனியர்கள் ஒருநாள் தொடரில் பங்கேற்க அறிவுறுத்தினார். ஆனால் ஹோம் சீசன் காரணத்தால் விராட் கோஹ்லி மற்றும் பும்ரா இருவருக்கும் ஓய்வு அளிப்பதாக தேர்வு குழு முடிவு செய்தது. அதேபோல் துணைக் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் சொந்த காரணங்களால் ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக தேர்வு குழுவினரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன்சி கேஎல் ராகுலிடம் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இதனிடையே அமெரிக்காவுக்கு விடுமுறைக்கு சென்றுள்ள கேப்டன் ரோகித் சர்மா, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க நாடு திரும்புவதாக தெரிய வந்துள்ளது. இதற்கான காரணம் குறித்து விசாரிக்கையில், “கேஎல் ராகுலின் கேப்டன்சி ஸ்டைல் தனக்கு ஒத்துப் போகாது’’ என்று கவுதம் காம்பீர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் முதல்முறையாக பயிற்சியாளராக பயணம் மேற்கொள்வதால் கேப்டன் ரோகித்சர்மாவுடன் காம்பீர் பணியாற்ற விரும்புவதாகவும், அதனால் முழு பலம் கொண்ட அணியை தேர்வு செய்யலாம் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடரின் போது லக்னோ அணியின் ஆலோசகராக கவுதம் காம்பீர் பணியாற்றிய போது, கேப்டனாக கேஎல் ராகுல் செயல்பட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் நல்ல புரிதல் இருப்பதாக பார்க்கப்பட்டு வந்த நிலையில், கேஎல் ராகுலிடம் கேப்டன்சி செல்வதை காம்பீர் விரும்பாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவுதம் காம்பீர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பாகவே இவ்வளவு குழப்பம் எழுவது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை அதிகரித்துள்ளது.
The post இலங்கையுடன் ஒரு நாள் தொடர்: ரோகித்துடன் பயணிக்கவே காம்பீர் திட்டம்.! கே.எல்.ராகுலை கேப்டனாக்க விருப்பமில்லையாம் appeared first on Dinakaran.