தேனி, ஜூலை 18: போடியில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கூறியுள்ளதாவது: போடியில் உள்ள வர்த்தகர் சங்க பொன்விழா மண்டபத்தில் நாளை காலை 10 மணியளவில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது. கூட்டத்தில், மா பயிரில் காலநிலைக்கேற்ப மகசூல் அதிகரிக்க கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் மற்றும் பூச்சி நோய் கட்டுப்பாடு வழிமுறைகள் குறித்து தோட்டக்கலை கல்லூரி பேராசிரியர்களால் எடுத்துரைக்கப்பட உள்ளது. மேலும், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்ட இனங்கள் குறித்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்களால் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட உள்ளது. எனவே, தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள்,
விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைகள் சம்பந்தமான திட்டங்கள் மற்றும் குறைகளை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம். மேலும், தங்களது கோரிக்கைளை கலெக்டரிடம் மனுக்களாக வழங்கலாம். விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் மனுக்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி அதன்மீது தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post போடியில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.