×

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவிக்கு ஆபத்தா?துணை முதல்வர் எதிர்ப்பால் பரபரப்பு

லக்னோ: ஆட்சியை விட கட்சியே பெரிது என்று துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா டிவிட்டரில் பதிவிட்டுள்ளது உபி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் உபியின் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி 37 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பாஜ கட்சி வெறும் 33 இடங்களை மட்டுமே பிடித்தது. உபியில் ராமர் கோயில் அமைந்திருக்கும் பைசாபாத் மக்களவை தொகுதியிலும் தோல்வி ஏற்பட்டது பாஜவுக்கு பெரிய பின்னடைவாகும். அந்த தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளர் வெற்றி பெற்றார். பா.ஜ தொண்டர்களின் அதீத நம்பிக்கையால் தான் தேர்தல் தோல்வி ஏற்பட்டதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் விளக்கம் அளித்தார்.

உ.பி.யில் முதல்வர் ஆதித்யநாத், துணை முதல்வர் கே.பி.மவுரியா இடையே கடுமையான மோதல் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மவுரியா நேற்று முன்தினம் டெல்லியில் கட்சி தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார். இதை தொடர்ந்து கட்சியின் மாநில தலைவர் பூபேந்திர சிங் சவுத்ரி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த பரபரப்பான சூழலில் நேற்று உ.பி. அமைச்சரவை கூட்டத்தை யோகி கூட்டினார். இதில் துணைமுதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கலந்து கொள்ளவில்லை. நேற்று மாலை லக்னோ வந்த மவுரியாவின் டிவிட்டர் பதிவு உ.பி. அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ‘ஆட்சியை விட கட்சி தான் பெரியது.

லக்னோவில் உள்ள எண்.7, காளிதாஸ் சாலையில் உள்ள எனது இல்லத்தின் கதவுகள் அனைவருக்கும் திறந்தே இருக்கும். நான் முதலில் பாஜ தொண்டன், அதன் பின்னர் துணை முதல்வர் பதவி எல்லாம். அமைச்சர்கள்,எம்எல்ஏக்கள்,மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கட்சி தொண்டர்களை மதிக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி உள்ளிட்ட டெல்லி தலைவர்களை மவுரியா சந்தித்து வந்தபிறகு வெளியிட்ட இந்த டிவிட்டர் பதிவு மூலம் முதல்வர் யோகியின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த சூழலில் உ.பி. கவர்னர் ஆனந்திபென் பட்டேலை நேற்று இரவு முதல்வர் யோகி ஆதித்யநாத் திடீரென சந்தித்து பேசியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

The post உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவிக்கு ஆபத்தா?துணை முதல்வர் எதிர்ப்பால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : U. B. ,Principal ,Yogi Adityanath ,Lucknow ,Deputy Prime Minister ,Kesav Prasad Maurya ,Ubi ,Lok Sabha elections ,Samajwadi ,India Alliance ,Dinakaran ,
× RELATED யு.பி.எஸ்.சி.க்கு ராகுல் காந்தி கண்டனம்..!!