×
Saravana Stores

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக, தமாகா வக்கீல் அணி நிர்வாகிகள் உள்பட மேலும் 3 பேர் கைது: லட்சக்கணக்கில் பணம் பரிமாற்றம் செய்தது அம்பலம்; தேடப்படும் குற்றவாளியாக பாஜ பெண் தலைவர் அறிவிப்பு

சென்னை: பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக, தமாகா வக்கீல் அணி நிர்வாகிகள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவருக்கும் லட்சக்கணக்கில் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும், பாஜ மாவட்ட மகளிர் அணி தலைவியாக இருந்த அஞ்சலை தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். இதில் சென்ற வருடம் வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்குவதற்காக அவரது தம்பி பொன்னை பாலு சதி திட்டம் தீட்டி கொலை செய்தது தெரிய வந்தது. இதற்கு வழக்கறிஞர் அருள் மற்றும் ரவுடி திருவேங்கடம் மூளையாக செயல்பட்டதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

இதில் திருவேங்கடம் என்பவர் ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதாக கூறியதன் பேரில் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவர் தப்பி ஓடி, போலீசாரை சுட முயன்றபோது அவரை என்கவுன்டர் செய்தனர். மீதம் உள்ள 10 பேர் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தபோது பல்வேறு தகவல்களை கைதானவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் கொலை செய்தவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் பரிமாற்றம் செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தனிப்படை போலீசார் திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மலர்க்கொடி (49), பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தமாகா வக்கீல் அணி நிர்வாகி பிரவீன் என்ற ஹரிஹரன் (27), திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (28) ஆகிய மூவரையும் கைது செய்தனர். இதில் மலர்க்கொடி அதிமுக பேச்சாளரான தோட்டம் சேகரின் மனைவி ஆவார். 2001ம் ஆண்டு தோட்டம் சேகரை ரவுடி சிவக்குமார் என்பவர் கொலை செய்தார். 20 வருடம் கழித்து தோட்டம் சேகரின் மகன்கள் 2021ம் ஆண்டு சிவக்குமாரை மாம்பலத்தில் வைத்து கொலை செய்தனர். இந்த வழக்கு மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. மலர்கொடி, அதிமுக வக்கீல் அணியில் உள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வழக்கறிஞர் அருள் என்பவரோடு மலர்க்கொடி தொடர்பில் இருந்துள்ளார். மலர்க்கொடிக்கும் அருளுக்கும் இடையே லட்சக்கணக்கில் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதற்கு வழக்கறிஞரான ஹரிஹரன் துணையாக இருந்துள்ளார். ஹரிஹரன் மூலமாக கொலை செய்தவர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட மற்றொரு நபரான திருநின்றவூர் சதீஷ்குமார் என்பவர் வழக்கறிஞர் அருளின் டிரைவராக பணிபுரிந்துள்ளார். இவருக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அனைத்து விவரங்களும் ஏற்கனவே தெரியவந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டுள்ள மலர்க்கொடி, ஹரிஹரன் ஆகிய இருவருக்கும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்யப் போகிறார்கள் என்ற விவரமும் நன்றாக தெரிந்து, இதற்கு பல வகைகளில் உதவி செய்துள்ளனர். எனவே மலர்க்கொடி, ஹரிஹரன், சதீஷ்குமார் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதில் ஹரிகரன், ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகு திருச்சியில் நடந்த தமாகா மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். சென்னையில் பதுங்கியிருந்தவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

சிறைச்சாலையில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள ஒருவருக்கு ஆம்ஸ்ட்ராங் கொலையில் மறைமுகமாக சம்பந்தம் உள்ளதா என்ற கோணத்திலும், மேலும் வேறு யார் யார் மறைமுகமாக இந்த கொலையில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கொலையில், ஆற்காடு சுரேஷின் காதலியான பாஜ மாவட்ட மகளிர் அணி தலைவி அஞ்சலைக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். போலீசார் தேடுவது தெரிந்ததும், அவர் தலைமறைவாகிவிட்டார். இதனால் அவரை தேடப்பட்டு வரும் குற்றவாளியாக போலீசார் அறிவித்துள்ளனர். அவரைப் பற்றிய தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்படும். அவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் போலீசார் அறிவித்துள்ளனர்.

The post பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக, தமாகா வக்கீல் அணி நிர்வாகிகள் உள்பட மேலும் 3 பேர் கைது: லட்சக்கணக்கில் பணம் பரிமாற்றம் செய்தது அம்பலம்; தேடப்படும் குற்றவாளியாக பாஜ பெண் தலைவர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Bahujan ,president ,Armstrong ,AIADMK ,Tamaga ,BJP ,CHENNAI ,Tamaka ,Bahujan Samaj ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குண்டாசில்...