புதுடெல்லி: குஜராத்தை தொடர்ந்து மும்பையிலும் குறைந்த எண்ணிக்கையிலான வேலைக்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முண்டியடித்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய பிரியங்கா காந்தி, கவனத்தை திசை திருப்புவதை நிறுத்திவிட்டு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பிரதமர் மோடி உருவாக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார். சமீபத்தில் குஜராத்தில் உள்ள ஒரு ஓட்டலில் 25 காலிபணியிடங்களுக்கான நேர்முக தேர்வில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்ட சம்பவம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. அதே போல, மும்பை விமான நிலையத்தில் சரக்குகளை கையாளும் வேலைக்காக 2,216 காலி பணியிடங்களுக்கு சுமார் 25,000 பேர் குவிந்தனர். இதனால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்படும் சூழல் உருவானது.
மோடி ஆட்சியில் நாட்டில் கடுமையான வேலைவாய்ப்பு பற்றாக்குறை நிலவுவதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த நிகழ்வுகள் அதற்கு ஆதாரமாக அமைந்துள்ளன. இந்நிலையில், மும்பை சம்பவத்தை தொடர்ந்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று தனது எக்ஸ் தளத்தில், ‘‘சில நாட்களுக்கு முன்பு, பிரதமர் மோடி பல கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளித்து சாதனைகளை முறியடித்துள்ளோம் என்று கூறினார். இன்று, வேலை இல்லாத இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ள வீடியோ வெளியாகி உள்ளது. மும்பையை போல இதற்கு முன் குஜராத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு 25 காலியிடங்களுக்காக ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் கடும் நெரிசல் போன்ற சூழல் உருவானது. இந்த சம்பவங்கள் நிச்சயம் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது.
ஆனால் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் அல்ல, தீவிர வேலைவாய்ப்பின்மையில். நாடு வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டத்தை சந்திக்கிறது. பிரதமர் மோடி தயவுசெய்து வெற்று வாக்குறுதிகளை அளிப்பதையும், கவனத்தை திசை திருப்புவதையும் விட்டுவிட்டு, நாட்டின் இளைஞர்களைப் பற்றி சிந்திக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். இளைஞர்களுக்கு கோடிக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் தேவை’’ என பதிவிட்டுள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் 8 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியது வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய போலிச் செய்திகளை பரப்புபவர்களை அமைதியாக்கியுள்ளது என்று பிரதமர் மோடி கடந்த வாரம் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
The post வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள் கவனத்தை திசை திருப்புவதை நிறுத்துங்கள் பிரதமர் மோடி: பிரியங்கா காந்தி தாக்கு appeared first on Dinakaran.