×
Saravana Stores

ங போல் வளை…யோகம் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜி

கவனிக்கும் கலை

ஒரே நேரத்தில் பல செயல்களில் ஈடுபடுவதை ‘மல்டி டாஸ்கிங் {MULTI TASKING}’ என்றும் தனித்திறமை என்றும் நாம் சொல்கிறோம். அதிலும் குறிப்பாக தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே அலுவலக வேலைகள் அல்லது வீட்டுப்பாடங்கள் செய்வேன். பாட்டு கேட்டுக்கொண்டே புத்தகம் படித்து முடித்துவிடுவேன் போன்ற செயல்களை சிலர் மிக எளிதாகச் சொல்வதைக் கவனிக்கலாம். இப்படி பல செயல்களை ஒரே நேரத்தில் செய்வது பலனளிக்குமா என்றால், நிச்சயமாகவே பலனளிக்காது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி செய்பவர்களை விதூஷகன் என்கிறது மரபு. அதாவது, நாடகம் அல்லது சர்க்கஸ் காட்சி தொடங்குவதற்கு முன்னதாக ஒரு கோமாளி திரையில் தோன்றி நம்மை சிரிக்க வைப்பான். அதற்கு பல வித்தைகளை ஒரே நேரத்தில் செய்து காண்பிப்பான். சைக்கிள் ஓட்டிக்கொண்டே, பந்தை வானத்தில் தூக்கிப்போட்டு பிடிப்பது. குட்டிக்கரணம் அடித்துக்கொண்டே ரப்பர் வளையத்தை தூக்கிப்போட்டு பிடிப்பது என சிறிது நேரம் செய்து காண்பித்து விட்டுசெல்வான்.

அப்படித்தானே ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்பவரும். அது ஒரு திறமை அல்ல ‘சிதறல் ‘. சரி, இந்த ‘ சிதறல் ‘ தன்மை இல்லாமல் நாம் யாராவது இருக்கிறோமா? இல்லை நாம் அனைவரும் தொடர்ந்து கவனச்சிதறல், மன எண்ணங்களின் சிதறல், செயல்களின் சிதறல் என ஏதேனும் ஒன்றில் இருந்து கொண்டேதான் உள்ளோம். ஏழு நிமிடத்துக்கு ஒருமுறை நமது போனை பார்க்கிறோம். முழுவதுமாக ஒரு பக்கம் படித்து முடிப்பதற்குள் எண்ணமும் கவனமும் இரண்டு மூன்று முறை சிதறிவிடுகிறது. இது இந்த நூற்றாண்டில் மட்டுமே இருக்கும் பிரச்சனையா என்றால் ஆம் முன் எப்போதும் மனிதர்களாகிய நாம் இவ்வளவு ‘சிதறல் தன்மையுடன் இருந்ததில்லை என்றே தெரிகிறது.

அதற்கு ஒரு காரணம் ‘அதீத நுகர்வுக் கலாச்சாரம்.’ யுவால் நோவா ஹராரி சொல்வது போல இன்று மனிதனை ஊடுருவி அவனை திசை திருப்பும் எந்த தொழிலும் வளம் கொழிக்கும் தொழில்தான் .உங்களுடைய முகநூல், வாட்சப், இணையம் என அனைத்தும் மிக கச்சிதமாக உங்களுக்குள் ஊடுருவி உங்களை கவர்ந்துவிட்டன. இனி இதிலிருந்து ஒருபோதும் மீளமுடியாது. இது மிகப்பெரிய ‘சுழல்’ ஒருசிலருக்கு மட்டுமே இதை நிர்வகிக்கும் கலை தெரிகிறது. அவர்களே நாளைய மனித வாழ்வின் போக்கை நிர்ணயிப்பவர்கள். உதாரணமாக, இந்த இணையம், ஊடகம் அனைத்தையும் தங்களுடைய மனக்கட்டுப்பாட்டால், தேவையான அளவு மட்டுமே உபயோகிக்கத் தெரிந்தவர்கள்.

சரி, இந்த அதீத நுகர்வால் என்ன பிரச்சனை? உண்மையில் எவ்வளவு நுகர்ந்தாலும் நம்மால் நிறைவை அடையவே முடியாது என்பதுதான் இதிலிருக்கும் ‘வலை’. ஆகவே யோக மரபு பிரத்யாகாரம் எனும் படிநிலையை உருவாக்கியது. ஆகாரம் என்றால் ‘நுகர்தல்’ உண்ணுதல், அனுபவித்தல் என பொருள். ப்ரத்யாகாரம் என்றால் சரியாக நுகர்தல், முழுமையாக அனுபவித்தல், கட்டுப்பாட்டுடன் உண்ணுதல் என பொருள்கொள்ளலாம்.

அதாவது அனுபவிப்பதை முழுவதும் நிறுத்திவிடச் சொல்லவில்லை. மாறாக, சரியாகவும், கட்டுப்பாட்டுடனும், முழுமையாகவும் அனுபவி என்கிறது யோகத்தின் இந்த ஐந்தாவது படி. அப்படி ஒரு பயிற்சியும் பழக்கமும் நமக்கு இருந்தால் நம்மை யாராலும் ‘ஊடுருவி’ செயல் செய்யத்தூண்ட முடியாது. நம் செயல்களும் மன இயக்கமும் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனாலும் வருடக்கணக்கில் பதிந்துவிட்ட உளப்பதிவுகளாலும், செயல்பழக்கத்தினாலும் மீண்டும் நாம் ‘சிதறல்’ நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது.

இந்தக் காலகட்டத்தில்தான் ‘தாரணை’ எனும் ஒருமுகப்பயிற்சி அறிமுகப்படுத்தப்பட வேண்டும். தாரணை என்பது தியானமும் அல்ல புலனடக்கமும் அல்ல. தியானப் பயிற்சிக்கு ஒருபடி முந்தையது, பிரத்தியாகாரம் எனும் புலனடக்கப் பயிற்சிக்கு ஒரு படி அடுத்தது. இதை பதஞ்சலி ‘தேச பந்தஸ் சித்தஸ்ய தாரணா’ என்கிறார் அதாவது மனதை ஒரு புள்ளியில் அல்லது இடத்தில நிறுத்துதல். ஒவ்வொரு முறை அது நழுவும் பொழுதும் மீண்டும் மீண்டும் அதே இடத்தில் கட்டுதல் என்று அர்த்தம்.

ஆகவே தாரணை பயிற்சிகளை வடிவமைக்கையில் ‘தேச’ அதாவது இடம் என்பதற்கு உடல் அல்லது மூச்சு என வகுத்தனர். புருவ மத்தியில் கவனம் வைத்து தியானம் செய்க என்று சொல்லப்படுவது இந்த சூத்திரத்தை மையமாக வைத்தே. அதே போல ஒருவர் மூச்சை மட்டுமே கவனித்துக்கொண்டும் தாரணையில் திகழலாம்.நம் ஆழத்தில் இருக்கும் முந்தைய பதிவுகளையும், இங்கு வந்தபின் திரட்டிக்கொண்ட பதிவுகளையும், ‘ஸம்ஸ்காரா, வாஸனா என இரண்டாகப் பகுக்கிறது மரபு. இதில் நம்முடைய அச்சங்களும், நிராசைகளும், குழப்பங்களும் அடக்கம். அவை ஒவ்வொரு முறை உள்ளே முட்டிக்கொள்ளும்பொழுதும் நாம் வெளியே எதையோ செய்து அவற்றை சமாளிக்க முயற்சி செய்கிறோம். நம்முடைய பெரும்பாலான துக்கங்களுக்கு இந்த முரண்பாடே காரணம். வெளியே பார்ப்பதற்கு மிகச் சாதரணமான ஒரு செயல்பாடாக இருக்கலாம். ஆனால், அதன் வேர் ஆழத்தில் ஒட்டியிருக்கும்.

ஒருவர் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகிறார் என வைத்துக்கொள்வோம். அவரை கவனித்தாலே தெரியும். சாதாரணமாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார். படிப்படியாக ஒரு மெல்லிய பரபரப்பை அடைவார். கைகளில் ஒரு சிறு துறுதுறுப்பு உண்டாகும். மனம் பரபரக்கத் தொடங்கிவிடும். நேராக சிகரெட்டை புகைக்க சென்றுவிடுவார். இந்த உடல்நலக்கேடான பழக்கம் அவருக்குள், சிறிது சிறிதாக பதியத் தொடங்கி, இந்தப் பழக்கத்தை விடவே முடியாத அடிமையாக மாற்றிவிடுகிறது. இதன் வேர் ஆழ்மனதில் அதாவது சித்தத்தில் இருக்கிறது.

இந்த அடிமைப் பழக்கத்தில் இருந்து அவர் வெளியேற விரும்பினால், முதலில் அவர் ஆழமான செயல்பாடுகளில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். பின்னர் அங்கே இந்த பழக்கத்தை விட்டுவிட தேவையான உறுதிமொழியை பதிய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அவர் இந்த பழக்கத்திலிருந்து வெளியே வரமுடியும். இதுவே, பயம், வஞ்சம், குழப்பம் போன்ற அனைத்துப் பதிவுகளுக்கும் தீர்வு. இதே இடத்தில்தான் நம் மகிழ்ச்சி, நிறைவு, ஆரோக்யம் போன்ற நல்ல பதிவுகளும் இருக்கின்றன. அங்கே செல்ல மிகச் சிறந்த வழியாக ‘தாரணையை’ யோக மரபு முன்வைக்கிறது.

உங்களால் சரியான தாரணைப் பயிற்சியைக் கண்டுகொள்ள முடிந்தால், உடல், உளம் என்கிற இரண்டு கூறுகளிலும் உள்ள நோய்களைத் தீர்த்துவிட முடியும். ஆனால் மேலே சொன்ன அதீத நுகர்வு இந்த ஒருமுகத்தன்மை கொண்ட செயல்பாட்டிற்கு பெரும் தடை. அதனால்தான் பிரதியாகாரம் தாரணை இரண்டையும் அடுத்தடுத்து வைத்தனர்.இந்த ஒருமுகப்படுத்தும் பயிற்சியில் சரியான ‘பொருளை’ தேர்ந்தெடுத்து அதன் மீது கவனத்தை குவிப்பது மிக முக்கியமான அம்சம்.

நாம் தேர்ந்தெடுக்கும் பொருள் நம்மை மேலும் உளச்சிக்கலுக்கு ஆளாக்காத ஒன்றாக அமைய வேண்டும். ஏனெனில் தாரணை, எனும் நிலையின் நீட்சிதான் தியானம் என்பதால், தவறான ‘பொருளை’ தியானிப்பது அதுவாகவே மாறுவதற்கு சமம். பயத்தை தூண்டக்கூடிய ஒரு வடிவத்தை தாரணை செய்யும் ஒருவர் அதை தியானிக்கிறார். ஒரு கட்டத்தில் பயமே உருவான மனிதராகிவிடுவார்.

வஜ்ராசன யோகமுத்ரா

இந்த பகுதியில் நாம் ‘வஜ்ராசனத்தில் யோகமுத்ரா’ எனும் பயிற்சியை காண்போம். இதில் வஜ்ரநாடி தூண்டப்பட்டு, செரிமான மண்டலம், பெருங்குடல் பகுதிவரை அழுத்தி நீவி விடப்படுவதால், நாட்பட்ட நோய்களில் விடுதலை அளித்து நல்ல பலனைத் தருகிறது. வஜ்ராசனம் எனும் நிலையில் அமர்ந்து கைகளைப் பின்புறமாக கட்டிக்கொள்ளவும், மூச்சை வெளியே விடும் பொழுது மெதுவாக முன் புறமாகக் குனிந்து நெற்றியில் தரையைத் தொட முயலவும். மூச்சு உள்ளே வரும் பொழுது நிமிர்த்து நிலைக்கு வரவும். பத்து முறை செய்யலாம்.

The post ங போல் வளை…யோகம் அறிவோம்! appeared first on Dinakaran.

Tags : Kunkum ,Dr. ,Yoga ,Selandararajan.ji ,
× RELATED மண்ணீரல் குறைபாடு… உஷார்!