×
Saravana Stores

காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் தீர்ப்புகளுக்கு எதிராக கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுப்பதா?: கி.வீரமணி கண்டனம்

சென்னை: காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் தீர்ப்புகளுக்கு எதிராக கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுப்பதா? என திராவிட கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினையில், தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடும் வகையில் முதலமைச்சர் தலைமையில் நேற்று (16.7.2024) சட்டமன்ற கட்சித் தலைவர்களை அழைத்து, ஒரு கூட்டத்தினை தலைமைச் செயலகத்தில் கூட்டி, ஒருமனதாக மூன்று தீர்மானங்களை நிறைவேற்றி, சம்பந்தப்பட்டவர்களின் கவனத்தை நன்கு ஈர்த்துள்ளது என்பது காலமறிந்த கடமை உணர்வுக்கான செயல்பாட்டின் வெளிப்பாடு ஆகும்!

காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைப் புறந்தள்ளுவதா?

1. காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், மாண்பமை உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று அளித்த தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தற்போது ஆணையிட்டுள்ளவாறு தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் தர முடியாது என்று மறுத்துள்ள கருநாடக அரசிற்கு – இந்த அனைத்து சட்டமன்றக்கட்சிக் கூட்டம் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
2. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் மாண்பமை உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரை உடனடியாக விடுவித்திட கருநாடக அரசுக்கு ஆணையிடுமாறு காவிரி நதிநீர்மேலாண்மை ஆணையத்தினை இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.
3. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாடு பெறவேண்டிய நீரை உடனடியாகப் பெறுவதற்கு, தேவைப்படின், உச்சநீதிமன்றத்தை நாடி, அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இக்கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது.

கருநாடக அரசு நடந்துகொள்ளும் போக்கு நியாயமானதல்ல!

இந்த மூன்று முத்தாய்ப்பான தீர்மானங்கள், தற்போது தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு குறிப்பாக டெல்டா நீர்ப் பாசன விவசாயப் பெருமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் கடும் சோதனைகளையும், தற்போதுள்ள காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் முடிவுகள் எப்படி முந்தைய தீர்ப்புகள், தீர்வுகளுக்கு விரோதமான அவமதிப்பு என்பதையும், கருநாடக அரசின் முறையற்ற அரசியல் சண்டித்தனத்தின் கொடுமையையும், கண்டனம் செய்ததோடு, சட்டங்களுக்கு அப்பாற்பட்டு, மனிதநேயத்தை மறந்தோ, மறைத்தோ அல்லது மறுத்தோ நடந்துகொள்வது, கருநாடக அரசுக்கு நியாயமல்ல என்பதையும் உணர்த்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் ஆணை – தீர்ப்புகளையும்கூட லட்சியம் செய்யாத அவமதிப்பு ஆணவப் போக்கு அல்லவா? மூன்றாவது தீர்மானப்படி உச்சநீதிமன்றத்தை அணுகுவதுதான் சரியான இறுதித் தீர்வு. ஒரு டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையேகூட நியாயமற்ற ஒரு சார்பு ஆணையாகவே பாதிக்கப்பட்ட பலருக்கும் தெரிகிறது. கொதிக்கும் மனநிலை தமிழ்நாட்டு டெல்டா விவசாயிகளிடம் கட்சி வேறுபாடின்றி உள்ளது. காவிரி நீர்ப் பங்கீடு சலுகையோ, பிச்சையோ அல்ல – அரசமைப்புச் சட்டப்படி தமிழ்நாட்டிற்கும், புதுச்சேரிக்கும் உள்ள உரிமையாகும்.ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றம் செல்லும் நிலையை காவிரி ஒழுங்காற்று ஆணையமும், கருநாடக அரசும் தவிர்த்திட முனையாமல் தங்கள் விருப்பம் போல் நடந்துகொள்வது எவ்வகையில் சரியானதாகும்?

திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சி – அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் வரும் 23 ஆம் தேதி அன்று மாலை! தமிழ்நாடு அரசு கூட்டிய இந்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை விளக்கியும், மேலும் பயிர்கள் பாசனத்திற்கு டெல்டா பகுதி விவசாயிகள் உரிமை பாதிக்கப்படாமல், நிரந்தரமாகக் காப்பாற்றப்படும் வகையிலும் வருகிற 23.7.2024 செவ்வாய் மாலை தஞ்சையில் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைவருக்கும் அன்பழைப்பு விடுத்துள்ளோம்! இந்தப் பிரச்சினையில், அரசியல் மாச்சரியங்களைத் தள்ளி, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் என்று பிரிந்திருக்காமல், கருநாடக மாநிலத்தில் உள்ள ஒற்றுமை – தண்ணீர் தர மறுத்து ஒரே குரலில் ஒலிக்கும் பிடிவாதக் குரல் – அழிச்சாட்டியம் காட்டும் நிலையில், நாம் மட்டும் ‘‘எல்லோரும் அங்கு தனித்தனிதான், ஒருமனதாகி அவர்கள் நம்மை எதிர்ப்பதெங்கே?‘‘ என்று கூறினால், அதைவிட கண்டிக்கத்தக்க, மக்கள் விரோதப் போக்கு வேறு இருக்குமா? என்று தமிழ்நாட்டுக் கட்சிகளும், தலைவர்களும் சிந்திக்கவேண்டும்.

கருநாடக துணை முதலமைச்சரின் அதிர்ச்சியான அறிவிப்பு!

கருநாடக துணை முதலமைச்சர் கூறியதாக ஒரு செய்தி சில தொலைக்காட்சிகளில் கண்டோம். ‘‘மேகதாது அணை கட்ட தமிழ்நாடு ஒப்புதல் தந்தால் ஒழிய, தண்ணீர் தர முடியாது‘‘ என்று கூறியிருப்பதான செய்தி அது. அச்செய்தி சரியாக இருப்பின், அதைவிட பெரும் அரசமைப்புச் சட்ட மீறல், சட்ட விரோத அறிவிப்பு வேறு என்னவாக இருக்கும்? சர்வாதிகார, எதேச்சதிகாரத்திலிருந்து ஜனநாயகத்தை மீட்டெடுக்கத் தொடர்ந்து போராடும் இந்தியா கூட்டணியின் ஒற்றுமைக்கு உலை வைக்க இந்த காவிரிப் பிரச்சினையை முதலீடு ஆக்கிக் கொள்ளும் நப்பாசையோடு தி.மு.க.வின் தொடர் வெற்றிகளைக் கண்டு அரண்டு போய் உள்ள அரைவேக்காடு அரசியல் தலைவர்களும், ஆரியமும் ‘‘சிண்டு முடியும்’’வழமையான ஆயுதத்தையும் காட்ட முனைந்துள்ளனர். இதை அவர்கள் உணர்ந்து நடந்துகொள்ளவேண்டாமா?

உரிமைகளை வென்றெடுக்கஒன்றிடுவோம்!

அதையும் தமிழ்நாட்டு மக்களிடம் புரிய வைத்து, நம் உரிமைதனை கடித்த, கடிக்கும் ஆரியப் பாம்பின் படமெடுத்தாடலுக்கும் இடந்தராமல், நம் உரிமைகளை நாம் வென்றெடுக்க முனையவேண்டும்!
எனவே, பல நோக்கு கவனப் பார்வையுடன் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணுவது அவசியம், அவசரம்! குறிப்பிட்டுள்ளார்.

 

The post காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் தீர்ப்புகளுக்கு எதிராக கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுப்பதா?: கி.வீரமணி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Karnataka government ,Tamil Nadu ,Cauvery ,Supreme Court ,K. Veeramani ,Chennai ,Dravida ,Kazhagam ,president ,
× RELATED ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி: அருவியில் குளிக்க தடை