×
Saravana Stores

பூப்பூவாய் பூத்திருக்கு…

நன்றி குங்குமம் தோழி

புளியம்பூ: பூவைச் சிறிது நெய் சேர்த்து வதக்கித் துவையலாக்கிச் சாப்பிட பித்த வாந்தி நிற்கும். இப்பூவை கஷாயமாக அருந்தினால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

சிற்றகத்திப்பூ: பூவை பால் சேர்த்தரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். பூவைக் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி, வடிகட்டி, தலையில் தேய்த்துக் குளித்தால் ஜலதோஷம் குணமாகும்.

அகத்திப்பூ: பூவை சுத்தம் செய்து பருப்புடன் சேர்த்து கூட்டு சமைத்து சாப்பிட இதயம் பலம் பெரும். பூவைச் சாறு பிழிந்து வெறும் வயிற்றில் சாப்பிட குடல் புண் ஆறும். வயிற்றுக் கோளாறுகள் தீரும்.

எள்ளுப்பூ: பூவை தினமும் உண்டு மோர் குடித்து வர, கண் நோய்கள் தீரும். எள்ளுப்பூ, மான் கொம்பு, பேரீச்சங்கொட்டை மூன்றையும் இழைத்து
தாய்ப்பாலில் குழைத்து கண்ணுக்கு மை போல் இட்டுக் கொண்டால் பார்வை தெளிவாகும்.

உசிலம்பூ: பூவை வேப்பம் பட்டையுடன் பசுவின் பால் விட்டு அரைத்து தடவி வர, உடலிலுள்ள தேமல் மறையும். பூவை அரைத்து வீக்கமுள்ள இடத்தில் பற்றுப் போட்டால் வீக்கம் குறையும்.

வெங்காயப்பூ: பூவையும் வெங்காயத்தையும் சமஅளவு எடுத்து வதக்கி வெல்லம் கலந்துண்ண வரட்டு இருமல் குணமாகும். பூவையும் வெங்காயத்தையும் சாறாக்கி இரவில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் காச நோய் குணமாகும்.

மருதாணிப்பூ: தேங்காய்எண்ணெயை நன்றாகக் காய்ச்சி அதில் ஓரிரு கைப்பிடி பூவைப் போட்டு எண்ணெய் சிவந்ததும் இறக்கி ஆறவைத்து பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும். இந்த எண்ணெய் கூந்தல் கருநிறமாக, செழித்து வளர உதவும். இரவில் தேய்த்துக் கொள்ள உறக்கம் வரும்.

தாமரைப்பூ: வெண்தாமரை பூவைப் பாலில் போட்டுக் காய்ச்சி வரும் ஆவியை கண்களில் படும்படி செய்தால் கண்நோய்கள் குணமாகும். மண்பாண்டத்தில் கால் லிட்டர் நீரில் வெண் தாமரைப் பூக்கள் இட்டு சுண்டக் காய்ச்சினால் கிடைக்கும் கஷாயத்தை அருந்தினால் காய்ச்சல், இதயநோய் குணமாகும்.

முருங்கைப்பூ: பூவை அவியல், கூட்டு, பொரியல் என்று சமைத்து உண்ணலாம். நரம்புத் தளர்ச்சி, பித்தம் குணமாகும். கண் எரிச்சல் போகும். இதயத்திற்கு வலுவூட்டும். வெப்பம் தணியும். ஆரோக்கியம் பெருகும். பூவின் கஷாயம் மயக்கம், வாந்தியைக் குணப்படுத்தும்.

செம்பருத்திப்பூ: பூவைப் போட்டு காய்ச்சிய எண்ணெயால் கூந்தல் செழித்து வளரும். தலை குளிர்ச்சி பெறும். ரத்தம் சுத்தமாகும், இதயம் வலுவடையும். பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து தேன் சேர்த்து கிரீன் டீ போல் குடிக்கலாம்.

– விசாலாட்சி கண்ணன், ஓசூர்.

The post பூப்பூவாய் பூத்திருக்கு… appeared first on Dinakaran.

Tags : Ivy ,
× RELATED படர்தாமரை உடலுக்கு நாசம்; ஆகாயத்தாமரை...