திருவனந்தபுரம்: கேரளா முழுவதும் தொடர்ந்து பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். இதன்காரணமாக இரவு நேர பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் சுற்றுலா மையங்களும் மூடப்பட்டுள்ளன. வங்காள விரிகுடாவில் கடந்த சில தினங்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஒடிசாவுக்கு மேல் மையம் கொண்டது. இதன்காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கேரளா முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே வீடுகள் இடிந்து விழுவது, மண் சரிவு, மரங்கள் சாய்வது என நிலைமை கடுமையாக இருந்து வருகிறது. நேற்றும் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில், கனமழைக்கு கேரளாவில் நேற்று ஒரே நாளில் 8 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம் வழயிலாவில் நேற்று இரவு மோளி (42) என்ற பெண் தனது கணவருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ராட்சத மரம் ஒன்று கார் மீது சாய்ந்தது. இதில் கார் அப்பளம்போல நொறுங்கியது. இந்த சம்பவத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி மோளி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவர் படுகாயமடைந்தார். இந்த நிலையில் மழை இன்னும் ஓயவில்லை. இன்று 6 வடமாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம் தவிர மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழையைத் தொடர்ந்து கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு உள்பட 8 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. பாலக்காடு மாவட்டத்தில் அருவிகளுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்திலுள்ள பொன்முடி, கோட்டயம் மாவட்டத்திலுள்ள இலவீழாபூஞ்சிறா, இல்லிக்கல் கல், மார்மலா அருவி, பாலக்காடு மாவட்டத்தில் அட்டப்பாடி, நெல்லியாம்பதி, பரம்பிக்குளம் ஆகிய பகுதிகளுக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் ஈராற்றுபேட்டை-வாகமண் சாலையில் இரவு நேர பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் மலையேற்றத்தை நிறுத்தி வைக்கவும், சாகச பூங்காக்களை மூடவும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வரும் 19ம்தேதி பலவீனமடைந்த பின்னர் வடமேற்கு வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் ஆகஸ்ட் 3ம் தேதி வரை கேரளாவில் பலத்த மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post கேரளாவில் தொடர்ந்து கன மழை; ஒரே நாளில் 8 பேர் பரிதாப பலி.! இரவு நேர பயணத்துக்கு தடை சுற்றுலா மையங்கள் மூடல் appeared first on Dinakaran.