மும்பை: இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு எதிராக டி.20 தொடரை 4-1 என கைப்பற்றிய நிலையில் அடுத்ததாக இலங்கையில் சுற்றுப்பயணம்மேற்கொண்டு 3டி.20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது. டி20போட்டிகள் முறையே ஜூலை 27,28,30ம் தேதிகளில் பல்லேகலேவிலும், ஒருநாள் போட்டிகள் ஆக.2,4,7ம் தேதிகளில் கொழும்பு மைதானத்திலும் நடைபெற உள்ளது. இந்ததொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் மும்பையில்இன்று கூடிஅணியை அறிவிக்க உள்ளனர். டி.20 போட்டிகளில் இருந்து கேப்டனாக இருந்த ரோகித்சர்மா, விராட் கோஹ்லி, ஜடேஜா ஓய்வு பெற்று விட்ட நிலையில் புதிய கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படுவார் என தகவல் வெளியான நிலையில் தற்போது, 2026ல் இந்தியாவில் நடைபெற உள்ள டி.20 உலக கோப்பை தொடரை கருத்தில் கொண்டு சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக இருப்பதாகவும், மற்ற தேர்வு குழு உறுப்பினர்கள் சூர்யகுமார் யாதவிற்கு ஆதரவாக இருப்பதாகவும் தெரிகிறது. ஆனால் பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் சூர்யகுமார் யாதவிற்கு ஆதரவாக இருக்கிறார். ஏனென்றால் ஹர்திக் பாண்டியாவுக்கு ஃபிட்னஸ் பிரச்னை இருப்பதால், அடுத்த 2 ஆண்டுகளுக்கு நிரந்தர கேப்டன் வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கேகேஆர் அணியின் கேப்டனாக கவுதம் கம்பீர் இருந்த போது, துணைக் கேப்டன் பதவியை சூர்யகுமார் யாதவிற்கு அளித்து ஆதரவாக இருந்தார்.
இதனால் சூர்யாவுக்கு தான் அதிக வாய்ப்பு உள்ளது. ரிஷப் பன்ட் துணை கேப்டனாக நியமிக்கப்படலாம். மேலும் ஜிம்பாப்வே தொடரில் கலக்கிய கில், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் , முகேஷ்குமார், அவேஷ்கான், ரவி பிஷ்னோய் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கலாம். ரோகித்சர்மா, பும்ரா, விராட் கோஹ்லிக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால் டிராவிட்டுக்கு பின் பயிற்சியாளராக இலங்கை தொடரில் பொறுப்பேற்க உள்ள கவுதம் கம்பீர், அவர்கள் 3பேரும் விளையாட வேண்டும் என விரும்புகிறார். ஏற்கனவே ஒருமாதம் ஓய்வில் இருக்கும் நிலையில், செப்டம்பரில் இந்தியாவில் நடைபெற உள்ள டெஸ்ட் தொடருக்கு பிறகு அவர்களுக்கு அதிக நேரம் ஓய்வு கிடைக்கும் என்பதால் 3பேரும் விளையாடவிரும்புகிறார். ஆனால் இவர்கள் இடம்பெறாவிட்டால் கே.எல்.ராகுல் ஒருநாள்போட்டிக்கு அணியை வழிநடத்தக்கூடும்.
ஹர்திக் பாண்டியா, டி.20தொடரில் மட்டும் ஆடி விட்டு ஒருநாள் தொடரில் சொந்த காரணங்களுக்காக விலகுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஸ்ரேயாஸ் அய்யர், இஷான்கிஷன் ஆகியோரும் அணிதேர்வர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தீவிரபயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அணியில் இடம்பிடிக்க இளம் வீரர்களிடையே கடும்போட்டி ஏற்பட்டுள்ளதால் இலங்கை தொடரில் இடம்பெறப்போவது யார், யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கவுதம் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்கபோகும் முதல் தொடர் இதுவாகும். மேலும் பவுலிங் பயிற்சியாளர், பேட்டிங், பீல்டிங் பயிற்சியாளர்கள் யார் என்ற அறிவிப்பும் விரைவில் வெளியாக உள்ளது. இலங்கை தொடருக்காக இந்திய அணி வரும் 23ம்தேதி புறப்பட்டுச் செல்ல உள்ளது.
The post இலங்கைக்கு எதிரான டி.20, ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு: அணியில் யார், யாருக்கு இடம் என எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.