நியூயார்க்: உலகளவில் கடந்த ஆண்டு தடுப்பூசி செலுத்தாத குழந்தைகள் அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக யுனிசெஃப் அமைப்பு வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியாவில் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு பெற்றோரிடம் இல்லையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒரு குழந்தை பிறந்தது முதல் ஒரு வயதை எட்டுவதற்கு உள்ளாகவே பலவகையான தடுப்பூசிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போடப்படுகின்றன.
ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் முன்னெடுப்புகளால் இந்த தடுப்பூசிகள் இலவசமாகவே போடப்படுகின்றன. இதனால் ஏழை எளிய மக்களின் குழந்தைகளும் பயன்பெறுகின்றன. கடந்த ஆண்டு சர்வதேச அளவில் யுனிசெஃப் அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் இந்தியாவில் 16 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் நைஜீரியா 21 லட்சம் குழந்தைகள் என்ற எண்ணிக்கையுடன் முத்த இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தானில் 4,67,000 குழந்தைகளும், பாகிஸ்தானில் 3,96,000 குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்படவில்லை என யுனிசெஃப் வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.
இந்திய பெற்றோருக்கு தடுப்பூசி பற்றிய புரிதல் இருந்தாலும் புதிது புதிதாக தோன்றும் நோய்கள் தடுப்பூசி மீதான நம்பிக்கையை குறைத்து இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கோவிட் பெருந்தொற்றுக்காக இந்தியா தடுப்பூசியை உருவாக்கியததால் தான் மூன்றாவது அலையின் போது உயிரிழப்புகள் இந்தியாவில் பெருமளவில் குறைந்ததாகவும் மருத்துவர் விளக்கமளித்துள்ளார். கருப்பை புற்றுநோய் வராமல் இருப்பதற்கு இன்றைய மருத்துவத்துறை தடுப்பூசிகளை கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கிறார் மருத்துவர் லக்ஷ்மி சசிகாந்த். தடுப்பூசி செலுத்துவது குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக என்ற புரிதல் பெற்றோரிடம் ஏற்பட வேண்டும் எனவும் மருத்துவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
The post தடுப்பூசி செலுத்தாத குழந்தைகள் அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா: 2023ம் ஆண்டு புள்ளி விவரத்தை வெளியிட்ட யுனிசெஃப் அமைப்பு!! appeared first on Dinakaran.