பெங்களூரு : கர்நாடாகாவில் உள்ள தொழிற்சாலைகள், பிற நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் 50% நிர்வாக பணிகளிலும் 75% நிர்வாகம் அல்லாத பணிகளிலும் கன்னடம் தெரிந்த உள்ளூர் நபர்களை கட்டாயம் நியமிக்க வழிவகுக்கும் சட்ட மசோதாவிற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடக மாநில தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர் நபர்களுக்கான வேலைவாய்ப்பு மசோதா 2024 என்ற பெயரிடப்பட்ட அந்த மசோதாவிற்கு அம்மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போதைய சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் கர்நாடகாவை உள்ள தனியார் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் 50% நிர்வாக பணிகளிலும் 75% நிர்வாகம் அல்லாத பணிகளிலும் கன்னடம் தெரிந்த உள்ளூர் நபர்களை கட்டாயம் நியமிக்க வேண்டும்.
கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் நோக்குடன் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர், 15 ஆண்டுகள் மாநிலத்தில் வசிக்கும் கன்னடத்தை தெளிவாக பேசவும் படிக்கவும் எழுதவும் திறன் கொண்டவர் இதற்கான தகுதியான நபர் என்று இந்த மசோதா தெரிவிக்கிறது. மேலும் விண்ணப்பதாரர்கள் கன்னடத்தை ஒரு மொழியாக கொண்ட மேல்நிலை பள்ளிச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் கர்நாடக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சியால் குறிப்பிடப்பட்ட கன்னட புலமை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் நிபந்தனையாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் தகுதியான அல்லது பொருத்தமான நபர்கள் கிடைக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் அரசுடன் இணைந்து உள்ளூர் நபர்களுக்கு 3 ஆண்டுகளுக்குள் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் அந்த மசோதா கூறுகிறது. இந்த சட்டத்தில் இருந்து நிறுவனங்கள் தளர்வு பெற விண்ணப்பிக்க முடியும். எனினும் அந்த நிறுவனங்களில் குறைந்தபட்சம், உள்ளூர் நபர்கள் நிர்வாக பதவிகளில் 25% மற்றும் மற்ற பிரிவுகளில் உள்ள பதவிகளில் 50%த்திற்கும் இருக்கக் கூடாது. மேலும் நிறுவனங்கள் இந்த மசோதாவை ஏற்க தவறினால் 10,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
The post தனியார் நிறுவனங்களில் கன்னட மக்களுக்கே 100% வேலைவாய்ப்பு என்ற மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.