×
Saravana Stores

காவிரி பிரச்னையில் காங்கிரஸ் தலைமை தலையிட திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: காவிரி பிரச்னையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தலையிடவேண்டும் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற தேர்தலில் முன்வைக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கூட்டாட்சி முறையை வலுப்படுத்துவதற்கு பல வாக்குறுதிகளை அளித்திருந்தது. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சியின் இந்த வாக்குறுதிகள் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தின. ஆனால், கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு, தமிழ்நாட்டின் உரிமையைப் புறக்கணிக்கும் விதமாகவும், அரசமைப்புச் சட்டப்படி அமைக்கப்பட்டு இருக்கும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உத்தரவை மதிக்காமலும் நடந்து கொள்வது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.

இந்த சூழலில், அகில இந்திய காங்கிரஸ் தலைமை உடனடியாக காவிரி நதிநீர் பிரச்னையில் தலையிட்டு காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அளித்த உத்தரவின்படி, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்குமாறு கர்நாடக காங்கிரஸ் அரசை அறிவுறுத்த வேண்டும். அத்துடன், மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தை கூட்டுமாறு ஒன்றிய பாஜ அரசை வலியுறுத்த வேண்டும். கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், காலம் தாழ்த்தாமல் உடனடியாக காங்கிரஸ் தலைமை இதில் கவனம் செலுத்த வேண்டுமென இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி என்கிற முறையில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

The post காவிரி பிரச்னையில் காங்கிரஸ் தலைமை தலையிட திருமாவளவன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,Congress ,Cauvery ,CHENNAI ,India Congress ,Congress party ,India ,
× RELATED பாஜக எதிர்ப்பில் விஜய்க்கு...