சென்னை: மின் கட்டண உயர்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்): மூன்றாம் முறையாக மின்கட்டண உயர்வு என்ற ஒரு பேரிடியை தமிழக மக்களின் தலையில் இறக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. விசைத்தறி மற்றும் சிறு, குறு தொழில்கள், தொழில் நிறுவனங்களின் வேண்டுகோளை ஏற்று மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
ஓ.பன்னீர்செல்வம் (முன்னாள் முதல்வர்): மின் கட்டண உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலையும் மேலும் உயர வழிவகுக்கும். . எனவே, மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): சமூக வளர்ச்சிக்கு மின்சார உற்பத்தியும், விநியோகமும் அரசின் கையில் இருப்பது அத்தியாவசியமாகும் என்பதை கருத்தில் கொண்டு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ள மின்கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து, நுகர்வோர் நலனைக் கருத்தில் கொண்டு மின் கட்டணத்தை வெகுவாகக் குறைக்க வேண்டும். மாதம் தோறும் மின் கட்டணத்தை வசூலிக்கும் முறையை கொண்டு வர வேண்டும்.
ராமதாஸ் (பாமக நிறுவனர்): பணவீக்கத்திற்கு இணையாக மின்சார கட்டணத்தை உயர்த்துவது மக்களை கடுமையாக பாதிக்கும். எனவே, மின்சாரக் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இது தொடர்பாக பாமக சார்பில் வரும் 19ம்தேதி சென்னையில் தொடர் முழக்க போராட்டம் நடைபெறும்.
பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்): தமிழக அரசு தொடர்ந்து மின் கட்டண உயர்வை உயர்த்துவதன் மூலம் சிறு, குறு வியாபாரிகள், விசைத்தறி வியாபாரிகள், விவசாய மக்கள் என அனைவரும் பாதிக்க கூடிய ஒரு நிலைமை இருக்கிறது. ஏற்கனவே பல அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களின் நிலை, மேலும் தொடர்ந்து மின் கட்டண உயர்வு ஏற்படுத்துவதால் அனைத்து தொழில்களும், மக்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படும் நிலையுள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக மின் கட்டண உயர்வை மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு திரும்ப பெற வேண்டும்.
நஜ்மா பேகம் (எஸ்டிபிஐ மாநில செயலாளர்): மின் கட்டண உயர்வு மூலம் மக்கள் மீது பொருளாதார தாக்குதலை தமிழக அரசு தொடர்ந்தால், அதை கண்டு மக்கள் நிச்சயம் வெகுண்டு எழுவார்கள். ஆகவே, உயர்த்தி அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்வதோடு, தேர்தல் வாக்குறுதிபடி மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை விரைவாக செயல்படுத்த வேண்டும்.
The post மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.