புதுடெல்லி: மறுவாக்கு எண்ணிக்கை கோரி 8 வேட்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இவிஎம் இயந்திரத்தை பரிசோதிக்க வேட்பாளருக்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தல், 4 மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் இரண்டாவது, மூன்றாவது இடத்தை பிடித்த சில வேட்பாளர்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்றும், இவிஎம் இயந்திரத்தை பரிசோதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அந்த வகையில் 8 வேட்பாளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். அவர்களில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களும் அடங்கும். மேற்கண்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘வேட்பாளர்கள் விரும்பினால், வாக்குப்பதிவுக்கு பிறகும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பரிசோதிக்க அவர்களுக்கு உரிமை உண்டு’ என்று தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைய விதிகளின்படி, இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தை பெறும் வேட்பாளர்கள் மட்டுமே இவிஎம் இயந்திரங்களில் பதிவான வாக்குகளை சரிபார்க்க விண்ணப்பிக்க முடியும்.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘சட்டசபை அல்லது லோக்சபா தொகுதிகளில் உள்ள 5 சதவீத இயந்திரங்களின் பதிவு அல்லது மைக்ரோகண்ட்ரோலரை சரிபார்க்கும் உரிமை வேட்பாளர்களுக்கு உண்டு’ என்று உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக தலைமை தேர்தல் ஆணையம் கடந்த ஜூன் 1ம் தேதி, சில வழிகாட்டல் நெறிமுறைகளை வெளியிட்டது. அதில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 7 நாட்களில் இவிஎம் சரிபார்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு ஒரு இவிஎம்-க்கு ரூ.40 ஆயிரம் செலுத்த வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது.
The post மறுவாக்கு எண்ணிக்கை கோரி 8 வேட்பாளர்கள் வழக்கு: இவிஎம் இயந்திரத்தை பரிசோதிக்க வேட்பாளருக்கு உரிமை உண்டு.! உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.