மதுரை: கடந்த 2019-ம் ஆண்டு மருத்து கல்விகளுக்கான நுழைவுதேர்வான நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து நுழைவுத்தேர்வு எழுதி அதில் அதிக மதிப்பெண்களை பெற்று தமிழக அரசின் அரசு மருத்துவகல்லூரிகளில் மாணவர்கள் இடம்பெறுகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவகல்லூரியில் மாணவர் உதித் சூரியா சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இதுபோன்று 8-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 2019-ம் ஆண்டு நீட் நுழைவுத்தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி தன்னை விடுவிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. கடந்த வார விசாரணையின் போது சிபிசிஐடி தரப்பில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை கூறியது. குறிப்பாக இந்தியாவில் இல்லாத ஒரு மாணவர் இந்தியாவில் 3 மாநிலங்களில் நீட் தேர்வு எழுதி அதில் அதிக மதிப்பெண் பெற்று அரசு மருத்துவகல்லூரியில் இடம்பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ஒன்றிய அரசுத் தரப்பில் தேசிய தேர்வு முகமை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் 2023-ம் ஆண்டு சில தகவல்களை சிபிசிஐடிக்கு வழங்கியுள்ளோம், மேலும் தேவையான தகவல்களை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம் என என்றார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக பல செய்திகள் வெளியாவதால் பல பிரச்சனைகள் வருவகிறது என செய்தி நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டுகளை வைத்தார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதி, ஊடகங்கள் செய்திகளை சரியாக வெளியிட்டு வருகின்றன. மாணவிகளின் அணிகலன்கள் அனைத்தையும் கழற்றி சோதனை செய்யும் நீங்கள் இந்தியாவில் இல்லாத மாணவர் ஒருவர் 3 மாநிலங்களில் தேர்வு எழுதியுள்ளார். அவருடைய ஆவணங்களை ஏன் முறையாக சோதிக்க வில்லை. நீட் தேர்வின் போது கைரேகைகள் மற்றும் ஆதார் விவரங்களை அளித்துதான் தேர்வு மையத்திற்குள் செல்ல வேண்டும். இந்த நிலையில் அவரை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதி இந்த வழக்கை 2019-ம் ஆண்டு முதல் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்களுடைய விசாரணையில் திருப்தி இல்லை. விசாரணை அதிகாரியை மாற்ற நீதிபதி அறிவுறுத்தினார்.
தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி கேட்கும் தகவல்களை தேசிய தேர்வு முகமை உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
The post நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்களை கண்டுபிடிக்காதது ஏன்..? விசாரணை அதிகாரியை மாற்ற ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.