×
Saravana Stores

சர்க்கரை கசக்கிற சர்க்கரை

நன்றி குங்குமம் டாக்டர்

ஹெல்த் +லைஃப் ஸ்டைல் கைடு!

இன்று இளவயதினருக்குக்கூட சர்க்கரைநோய் வருகிறது. பாரம்பரியம், வாழ்வியல் கோளாறுகள், உணவுமுறை எனப் பலவிதமான காரணங்கள் இதற்கு இருக்கின்றன. சர்க்கரை நோய் ஏன் வருகிறது? வராமல் தடுப்பது எப்படி? சர்க்கரை நோய் வந்துவிட்டால் எப்படி எதிர்கொள்வது? சர்க்கரைநோயை எப்படிக் கட்டுப்படுத்துவது? என்பதை இங்கு பார்ப்போம்.

‘நாம் சாப்பிட்ட உணவானது, உடலில் உள்ள திசுக்களுக்கு ஆற்றல் அளிக்கும் வகையில் குளுக்கோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. தவிர, கல்லீரலும் குளுக்கோஸை உற்பத்தி் செய்கிறது. ரத்தத்தில் கலக்கப்பட்ட குளுக்கோஸை திசுக்கள் தானாகக் கிரகிக்க முடியாது. இதற்கு ஒரு சாவி போல செயல்படுவதுதான் இன்சுலின். கணையத்தில் இன்சுலின் சுரக்கிறது. ஒருவருக்குப் போதிய அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்றாலோ, இன்சுலின் செயல்திறன் போதுமானதாக இல்லை என்றாலோ, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடுகிறது.

இதையே சர்க்கரை நோய் என்கிறோம். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அது நரம்பு மண்டலம், கண், சிறுநீரகம், ரத்தக் குழாய் என உடலின் அனைத்து உறுப்புக்களையும் பாதிக்கிறது.சர்க்கரை நோய் டைப் 1 மற்றும் டைப் 2 என்று இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. தவிர, ப்ரீ டயாபடீஸ், கர்ப்பகால சர்க்கரை நோய் போன்ற வகைகளும் உண்டு.

டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் முற்றிலுமாக சுரப்பது இல்லை. இது பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடியது. இவர்கள் ஆயுள் முழுக்க இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டும்.

டைப் 2 சர்க்கரை நோய் என்பது மரபியல் மற்றும் வாழ்க்கைமுறை மாறுபாட்டால் ஏற்படக்கூடியது. இவர்களுக்கு இன்சுலின் சுரக்கும். ஆனால் அதன் அளவு போதுமானதாக இருக்காது. சிலருக்கு இன்சுலின் தரம் போதுமானதாக இருக்காது. இதை இன்சுலின் ரெசிஸ்டென்ஸ்’ என்போம்.

டைப் 2 சர்க்கரை நோய் யாருக்கெல்லாம் வரலாம்?

45 வயதைக் கடந்தவர்கள்

உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் மற்றும் உடல் பருமனானவர்கள்

கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் வந்தவர்கள்

குடும்பத்தில் பெற்றோருக்குச் சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள்

ப்ரீ டயாபடீஸ் உள்ளவர்கள்

உடல் உழைப்பு குறைந்தவர்கள்

உடற்பயிற்சி செய்யாதவர்கள்

கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள்

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்

உணவுக் கட்டுப்பாடு இல்லாதவர்கள்

முதல்நிலை தடுப்பு முறை

சர்க்கரை நோய் வராமல் தடுப்பதே முதல்நிலை தடுப்பு முறை. இதைப் பின்பற்றிச் சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எப்படி?

உயரத்திற்கேற்ற சரியான எடையைப் பராமரிக்க வேண்டும்.உங்கள் பி.எம்.ஐ அளவு எப்போதும் 18.5 முதல் 22.9க்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் குறைக்கும் ஒவ்வொரு கிலோ எடையும் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை மட்டுமல்ல, இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கான வாய்ப்பையும் குறைக்கும். இடுப்புச் சுற்றளவு ஆண்களுக்கு 90 செ.மீக்கு மிகாமலும், பெண்களுக்கு 80 செ.மீக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

உடல் உழைப்பு மிகக் குறைந்து ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கும் வாழ்க்கைமுறை டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை ஏற்படுத்திவிடும். டி.வி, கம்ப்யூட்டருக்கு முன்னால் மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்காமல், துடிப்பான வாழ்க்கைமுறைக்கு மாறுவதன் மூலம் நோயைத் தடுக்க முடியும்.தசைகளுக்குக் கடினமான வேலை கொடுங்கள். அது இன்சுலின் செயல்திறனை அதிகப்படுத்தும், குளுக்கோஸ் கிரகிக்கும் திறனை மேம்படுத்தும்.தினசரி குறைந்தது 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்வது, டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை 30 சதவிகிதம் அளவுக்குக் குறைக்கிறது.

மிகச் சரியான டயட்

சர்க்கரை நோயைத் தடுக்கும் டயட் என்பது, ஆரோக்கியமான உணவை உட்கொள்வதுதான். சரியான நேரத்தில், சரியான உணவைச் சாப்பிடுவது சர்க்கரை நோயைத் தவிர்ப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.தகுந்த அளவில், வெவ்வேறு ஊட்டச்சத்துமிக்க உணவுகளைச் சரிவிகிதத்தில்் எடுத்துக்கொள்ளுங்கள். இது ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்வுக்கு அடிப்படை.சாப்பிடும் உணவு ஊட்டச்சத்து மிகுந்ததாகவும்், கொழுப்பு குறைவானதாகவும், கலோரி நடுத்தர அளவி்ல் உள்ளதாகவும் இருக்க வேண்டும்.

நாம் சாப்பிடும் அரிசி போன்ற கார்போஹைட்ரேட் உணவுகள் மீது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். சர்க்கரை நோய் வராமல் தடுக்க உணவில் செய்ய வேண்டிய மாறுதல்கள்

முழுதானிய உணவுக்கே முன்னுரிமை!

முழுதானிய உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.முழுதானியத்தில் உள்ள தவிடு மற்றும் நார்ச்சத்தானது, செரிமான என்சைம்களை மட்டுப்படுத்தி, உணவு உடனடியாக செரிமானமாவதைத் தாமதப்படுத்துவதன் மூலம், சர்க்கரை ரத்தத்தில் கலக்கும் வேகத்தைக் குறைக்கிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை சிறிது சிறிதாகவே சேகரமாவதால் இன்சுலினின் வேலைப்பளு குறைந்து சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு தடுக்கப்படுகிறது.

மைதாவுக்கு நோ

மைதாவில் செய்யப்பட்ட பிரட், வெள்ளை அரிசிச் சாதம், மசிக்கப்பட்ட உருளைக்கிழங்கு உள்ளிட்டவை மிக விரைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்பவை. இதனால் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.

கூல்டிரிங்க்ஸுக்கு நோ

சர்க்கரை அளவு அதிகம் உள்ள குளிர்பானங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். குளிர்பானங்கள், பழச்சாறு, சோடா, கோலா வகைகள் போன்றவை உடல் எடை கூடுவதற்குக் காரணமாக இருக்கின்றன. இதனால் இன்சுலின் செயல்திறன் பாதிக்கப்பட்டு, டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

கொழுப்பு நல்லதா?

நாம் உண்ணும் உணவில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என இரண்டு வகைக் கொழுப்புகளும் உள்ளன. நல்ல கொழுப்புள்ள உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். வெஜிடபிள் எண்ணெய், கொட்டை வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றில் நல்ல கொழுப்பான பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது.

பதப்படுத்தப்பட்ட, பாக்கெட் செய்யப்பட்ட, வறுக்கப்பட்ட உணவுகளில் கெட்ட கொழுப்பான டிரான்ஸ்ஃபேட் உள்ளது. இவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.உணவு பாக்கெட்களில் ‘ஹைட்ரஜனேட்டட்’ (Hydrogenated) என்று இருந்தாலே அதைத் தவிர்த்துவிட வேண்டும். சிவப்பு இறைச்சியைத் தவிர்த்து விடுதல் நல்லது. மாடு, பன்றி போன்ற கொழுப்புச் சத்துள்ள இறைச்சிகளைச் சாப்பிடுவது சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை அதிகரிப்பதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

கொழுப்பு குறைந்த பால் பொருட்கள், கோழி (தோல் நீக்கப்பட்டது), மீன் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். சிகரெட் பிடிப்பவர்களுக்கும், மது அருந்துபவர்களுக்கும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இரண்டாம் நிலை தடுப்புமுறை

சர்க்கரைநோய் வந்துவிட்டால், அதைக் கட்டுக்குள் வைத்து மகிழ்ச்சியான வாழ்வைத் தொடருவதற்கான வழிமுறைகளை, இரண்டாம் நிலை தடுப்பு முறைகள் என்கிறோம்.

சர்க்கரைநோய் வந்தாலும் மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தொடர, சர்க்கரை நோயாளிகள் ஒவ்வொருவரும் ஏ, பி, சியைப் பற்றித் தெரிந்திருப்பது அவசியம்.
ஏ என்பது ஏ1சி பரிசோதனையையும், பி என்பது ரத்த அழுத்தத்தையும், சி என்பது கொலஸ்ட்ரால் அளவுக் கட்டுப்பாட்டையும் குறிக்கும்.

ஏன் ஏ, பி, சி முக்கியம்?

சர்க்கரைநோய் இல்லாதவர்களைக் காட்டிலும் சர்க்கரைநோய் வந்தவர்களுக்கு இதய நோய்், மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே இவர்கள் தங்கள் ஏ, பி, சி அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகமிக முக்கியம்.

ஏ1சி பரிசோதனை(ஏ)

இது கடந்த மூன்று மாதத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு என்பதைக் கண்டறிய உதவுகிறது. இந்த பரிசோதனையில் 7க்கு கீழ் இருந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறது என்று அர்த்தம். எனவே சர்க்கரை நோயாளிகள் 7க்கு கீழ் தங்கள் பரிசோதனை முடிவுகள் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

ரத்த அழுத்தம்(பி)

ரத்த அழுத்தம் 140/90 எம்.எம்.எச்.ஜி என்ற அளவில் இருக்க வேண்டும்.

கொலஸ்டிரால்(சி)

மொத்தக் கொழுப்பு 180 எம்.ஜி.எஸ்க்கு மிகாமல் இருக்க வேண்டும். எச்.டி.எல் (நல்ல கொழுப்பு) ஆண்களுக்கு 45க்கு மேலும், பெண்களுக்கு 50க்கு மேலும் இருக்க வேண்டும் எல்.டி.எல் (கெட்ட கொழுப்பு) இருவருக்குமே 100க்கு குறைவாக இருக்க வேண்டும். சர்க்கரை நோய் வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவதுடன், மற்ற உடல் உறுப்புகளையும் பாதி்க்கிறது.

சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகள்

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், அது சிறுநீரகத்தைப் பாதித்து, ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட வழிவகுக்கும். சர்க்கரை நோயால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதுதான் ‘டயாபடிக் நெப்ரோபதி’.ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது, சிறுநீரகமானது கூடுதலாக வேலை செய்யவேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் கூடுதல் பளு காரணமாக, சிறுநீரகம் தன் செயல்பாட்டையே நிறுத்திவிடும். நோய்க்கான அறிகுறிகள் வெளியே தெரிவதற்கு முன்பே இந்தப் பிரச்னை தொடங்கிவிடும்.

ஆரம்பக் கட்டத்தில் சிறுநீருடன் புரதம் வெளியேறும். இதை, சிறுநீர் பரிசோதனை செய்வதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம். அவ்வப்போது ரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம் சிறுநீரகத்தின் செயல்பாட்டைக் கண்டறிந்து ஆரம்ப நிலையிலேயே சரிப்படுத்தலாம். சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருப்பது, டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்வது, ஆரோக்கிய உணவுப் பழக்கவழக்கம் ஆகியவை மட்டுமே சர்க்கரை நோயால் சிறுநீரகம் பாதிக்கப்படாமல் இருக்கச்செய்யும் வழிகள்.

கண்ணில் ஏற்படும் பாதிப்புகள்

சர்க்கரைநோயாளிகளுக்கு ‘கண் புரை நோய், குளுக்கோமா மற்றும் விழித்திரைப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சர்க்கரை நோயாளிகளிடம் மிகச் சாதாரணமாகக் காணக்கூடியது டயாபடிக் ரெட்டினோபதி. பார்வை இழப்புக்கான முன்னணி காரணங்களில் இதுவும் ஒன்று. விழித்திரையில் உள்ள ரத்த நாளங்களில் மாற்றம் ஏற்படுத்தும் நோய் இது. கண்ணுக்குள் ரத்த நாளங்கள் வீங்கி, திரவம் கசியத் தொடங்கும். காலப்போக்கில் விழித்திரையில் ரத்த ஓட்டத்தைக் கடுமையாகப் பாதிக்கும்.

ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகள் மற்றும் சிரைகள் பலவீனமடைந்து பழுதடையும். ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தெரியாது. கவனிக்காமல் விட்டால், பார்வை பறிபோய்விடும். பார்வை ஆரம்பத்தில் சிறிது மங்கலாகத் தெரியும், திடீரென பார்வை போதல், ஒளியைச் சுற்றி வட்டங்கள் தெரிதல், கண் கூசுதல் போன்றவையும் ஏற்படலாம்.‘மாக்யுலா’ என்பது கண்ணில் துல்லியமான, நேரடியான பார்வை ஏற்படும் பகுதி. இந்தப் பகுதியில் கசியும் திரவம், மாக்யுலாவை வீங்கச்செய்யும். இதனால் பார்வை மங்கலாகும். இந்த நிலையை ‘மாக்யுலர் எடிமா’ என்கிறோம். டயாபடிக் ரெட்டினோபதி உள்ளவர்களுக்கு, எந்தக் கட்டத்திலும் இந்த நிலை ஏற்படலாம்.

இதைத் தவிர்க்க நோயாளிகள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கண்களைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதும், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் பார்வைக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

ஈறுகளில் ஏற்படும் பாதிப்பு

சர்க்கரை நோயால் சிறுநீரகம், கண்களைப் போலவே அதிகம் பாதிக்கப்படுவது ஈறுகள்தான். சர்க்கரை நோய் அதிகரிக்கும்போது பல் ஈறுகள் பலவீனம் அடைவதால் பல் ஆடுதல் பிரச்னை ஏற்படும். பல் ஈறுகளில் பாக்கெட் போன்ற அமைப்பு உள்ளது. இது, பல்லுக்கும் ஈறுக்கும் இடையில் 1.2 மி.மீ. அளவுக்கு ஆழமாக இருக்கும். இங்குதான் பற்களைப் பாதுகாக்கும் திரவம் சுரக்கிறது.

பற்களில் உணவுத் துகள்கள், காரை படியும்போது ஈறு பாதிக்கப்படும். பல்லையும் எலும்பையும் இணைக்கும் தொடர்பு துண்டிக்கப்படும். இந்த ஆழமானது 3 முதல் 4. மி.மீ. அளவுக்கு ஆழமாவதை ‘கம் பாக்கெட்’ என்று சொல்வோம். இந்த பாக்கெட்டில் நோய்த் தொற்று ஏற்படும்போது அது சர்க்கரைநோயின் பாதிப்பையும் அதிகரிக்கிறது. எனவே, பல்லில் நோய்த் தொற்று வராமல் பாதுகாப்பது மிகவும் அவசியம்.

தினந்தோறும் இரண்டுமுறை பல் துலக்க வேண்டும். பற்களுக்கு இடையில் உள்ள அழுக்கை அகற்ற ஃபிளாசிங் செய்ய வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

பாதங்களில் ஏற்படும் பாதிப்புகள்

சர்க்கரை நோயாளிகளுக்கு டயாபடிக் நியோரோபதி காரணமாக, அழுத்தத்தைத் தாங்கக்கூடிய கால் பகுதியில் அடிக்கடி புண் ஏற்படும். ஆறில் ஒரு சர்க்கரை நோயாளிக்குப் பாதப்புண் ஏற்படுகிறது. இது காலையே துண்டிக்கும் அளவுக்கு விபரீதமாகிவிடச் சாத்தியமுள்ள பிரச்னை.உலக அளவில் கால் துண்டிப்பு செய்யப்பட்டவர்களில் 85 சதவீதம் பேர் பாதப்புண்ணால் பாதிக்கப்பட்ட சர்க்கரை நோயாளிகளே. கால்களில் வெட்டுக்காயங்கள், வெடிப்புகள், கொப்புளங்கள், சிவந்துபோய் இருத்தல், வீக்கம், கால்விரல் நகங்களில் பிரச்னை ஆகியவற்றை தினசரி கவனிக்க வேண்டும். கண்ணாடி உதவியுடனோ அல்லது அடுத்தவர் உதவியுடனோ அடிப்பாதங்களைப் பார்க்க வேண்டும். ஏதேனும் வித்தியாசமாக இருந்தால், உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.

அன்றாடம் கால்களை கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மிதமான வெந்நீரைப் பயன்படுத்த வேண்டும். கால்களை மென்மையான துணி அல்லது பஞ்சு வைத்து, அழுத்தமாகத் துடைக்காமல் ஒற்றி ஒற்றி ஈரத்தை எடுக்க வேண்டும். கால் விரல்களுக்கு இடையே ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வெறும் காலுடன் நடக்கக் கூடாது. வீட்டிலும் செருப்பு அணிந்தே நடக்க வேண்டும். புகை பிடிக்கக்கூடாது. இதனால், கால்களில் ரத்த ஓட்டம் குறையும்.

தொகுப்பு: இளங்கோ கிருஷ்ணன்

The post சர்க்கரை கசக்கிற சர்க்கரை appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED விபத்தில் புதுவை தினகரன் பொது மேலாளர் பலி