×
Saravana Stores

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மருத்துவ திட்டங்கள் உலகிற்கே வழிகாட்டக் கூடிய திட்டங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

சென்னை: தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரக்கூடிய மருத்துவத் திட்டங்கள் இந்தியா மட்டுமில்லாமல், உலகிற்கே வழிகாட்டக்கூடிய திட்டங்களாக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கையில் அறிவித்த “பாதம் பாதுகாப்போம் திட்டம்” செயலாக்கப்படுவதன் அங்கமாக நீரிழிவு பாத பாதிப்புகளை கண்டறிய, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் களப்பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கும் பயிற்றுநர்களுக்கான பயிலரங்கம் எழுப்பூரில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடந்தது.

இதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் பாதம் பாதுகாப்போம் திட்ட விளக்கம், செயலாக்கம் குறித்த காணொலி மற்றும் நீரிழிவு பாத பாதிப்பு மருத்துவக் கையேட்டை வெளியிட்டார். தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: நீரிழிவு நோய் பாதிப்புகள் என்பது உலக மக்களை அச்சுறுத்தி வருகின்ற முதன்மையான நோய்களுள் ஒன்று. நீரிழிவு நோயாளிகளில் பாத பாதிப்புகளுக்கு ஆளாகி வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகி வருகிறது.

எனவே பாத பாதிப்புகளை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கு பாதம் பாதுகாப்போம் என்கிற திட்டம் கடந்த நிதிநிலை அறிக்கையில் தஞ்சாவூர் மாவட்டத்தில், பாதம் பாதுகாப்போம் திட்டத்தின்படி மருத்துவ மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரூ.1.05 கோடி செலவில் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மையம் தொடங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நீரிழிவு நோயாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,68,430 பேர், இதில் பாத பரிசோதனை செய்து கொண்டவர்கள் 1,65,681, அதாவது 98 சதவீதம் பாத பரிசோதனைகள் செய்து கொண்டார்கள்.

அதில் பாதம் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,777. அதாவது 10.12 சதவீதம். எனவே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதம் பேருக்கு பாத பாதிப்புகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், நீரிழிவு நோயினால் ஏற்படும் பாதப் பாதிப்புகளை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து கால் இழப்புகளை தடுப்பதற்கு ஒருங்கிணைந்த பாதம் பாதுகாப்போம் திட்டம் ரூ.26.62 கோடியில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கு ஒட்டுமொத்தமாக 28,000 பேருக்கு பயிற்றுவிக்க இருக்கிறது. தற்போது, இந்த அரங்கத்தில் 150 மருத்துவர்களுக்கு குறிப்பாக பயிற்றுநர்களுக்கு பயிலரங்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக ஒட்டுமொத்தமாக 8000 மருத்துவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் என இந்த பயிலரங்கம் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. அதோடுமட்டுமல்லாமல் 19,175 மக்களைத் தேடி மருத்துவ திட்டப் பணியாளர்களுக்கும் பயிலரங்கள் விரிவாக்கம் செய்யப்படும்.

பாத பாதிப்புகளை கண்டறியும் பரிசோதனை மையங்கள் தமிழ்நாட்டில் உள்ள 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அமைக்கப்பட இருக்கிறது. 100 அரசு மருத்துவமனைகள் மற்றும் 21 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் 15 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பாத அறுவை சிகிச்சை சேவைகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த திட்டம் சார்ந்த மருத்துவப் பணியாளர்களுக்கு உரிய பயிற்சிகளுக்கான பயிற்றுநர்களுக்கான பயிலரங்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மருத்துவ திட்டங்கள் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

குறிப்பாக மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, இதயம் காப்போம், சிறுநீரகம் காப்போம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் புகழ்பெற்ற திட்டங்களாக இருக்கிறது. இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் கோவிந்தராவ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மருத்துவ திட்டங்கள் உலகிற்கே வழிகாட்டக் கூடிய திட்டங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Minister M. Subramanian Perumitham ,Chennai ,Minister ,M. Subramanian ,India ,Department of Medicine and People's Welfare ,
× RELATED ‘வெப்ப அலை பாதிப்பு’ மாநில பேரிடராக...