புதுடெல்லி: கஞ்சா வைத்திருந்ததாக யூடியூபர் சங்கர் மீது வழக்குப் பதிவு செய்டப்பட்டது. சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாயார் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் சுதன்சு துலியா மற்றும் அசனிதின் அனுமல்லா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சித்தார்த் லூத்ரா மற்றும் குமணன் ஆகியோர்,‘‘ சட்டம் ஒழுங்கு, பெண் காவலர்களுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்தது, மாநில அரசு மற்றும் முதல்வர் ஆகியோருக்கு எதிராகவும் தவறான பதிவுகளை வெளியிட்டது உட்பட சவுக்கு சங்கர் மீது மொத்தம் பல வழக்குகள் உள்ளது.
இவை அனைத்தையும் அடிப்படையாக கொண்டு தான் தற்போது சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது. எனவே அதனை ரத்து செய்வது என்பது சாத்தியம் கிடையாது’’ என தெரிவித்தனர். இதற்கு யூடியூபர் சங்கர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,‘‘இந்த விவகாரத்தில் பொருத்தமட்டில் மனித பிறவியிலேயே மிக மோசமான நடத்தை கொண்டவராக சவுக்கு சங்கரை நீதிமன்றம் பார்க்கிறது. அவருடைய பேச்சு என்பது சட்ட விதிகளின் அனைத்து எல்லைகளையும் தாண்டும் விதமாக இருந்துள்ளது. சமூக வலைதளங்களில் பேசும் போது ஏன் இப்படி ஒழுக்கமற்ற முறையில் சவுக்கு சங்கர் நடந்து கொண்டுள்ளார்.
இது உச்ச நீதிமன்றத்திற்கே மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்த போது கண்ணியமற்ற முறையில் நடந்து கொண்டுள்ளார். அவரது செயல்களை மன்னிக்கவே முடியாது. இந்த விவகாரத்தில் யூடியூபர் சங்கருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியுமா? அல்லது முடியாதா? என்பதை ஆராய வேண்டியுள்ளது. அதனால் இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
The post விசாரணை வரும் 18க்கு ஒத்திவைப்பு யூடியூபர் சங்கர் செயல்களை மன்னிக்கவே முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து appeared first on Dinakaran.