×
Saravana Stores

அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: திருவள்ளூர் மாவட்ட விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

* மாணவர்கள் படிக்க தடையாக இருக்கும் எதையும் உடைப்பதே எங்கள் பணி என சூளுரை

சென்னை: பசியாக இருந்தாலும், நீட் தேர்வாக இருந்தாலும், புதிய கல்வி கொள்கையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மாணவர்கள் படிப்பதற்கு எதுவும் தடையாக இருக்க கூடாது. அந்த தடைகளை உடைப்பதுதான் எங்களுடைய முதல் பணி என்று முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்கம் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி, புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

விழாவில் முதல்வருக்கு மாணவர்கள் பூச்செண்டு கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். முன்னதாக காமராஜரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு மகிழ்ந்தார். பின்னர் நடந்த விழாவில் அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்று பேசினார். திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில், எம்எல்ஏக்கள் திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி எஸ்.சந்திரன், சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், ஆணையர் அமுதவல்லி,

கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, புனித அன்னாள் சபை தலைவி சகோதரி கிளாரா வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் மற்றும் மாணவ மாணவிகள் இணைந்து முதல்வருக்கு நினைவுப் பரிசு வழங்கினர். இதனையடுத்து காலை உணவு திட்டம் குறித்த குறும்படம் ஒளிபரப்பானது. முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

பள்ளிக்கு வரக்கூடிய குழந்தைகளுடைய பசியை போக்க வேண்டும் என்று முடிவு செய்து உருவாக்கிய திட்டம்தான் இந்த காலை உணவு திட்டம். அரசாங்கத்திற்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, ஒரு குழந்தை கூட பசியோடு பள்ளியில் தவிக்க கூடாது என்று இந்த திட்டத்தை தொடங்க உத்தரவிட்டேன். 2 ஆண்டுகளுக்கு முன்னால், அண்ணாவின் பிறந்தநாளில் இந்த திட்டத்தைத் தொடங்கினேன். இன்றைக்கு காமராஜரின் பிறந்தநாளில் இந்த திட்டத்தை விரிவுபடுத்தியிருக்கிறேன்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும்தானா, எங்களுக்கு இல்லையா என்று அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் கேட்டார்கள். அதனால்தான் கிட்டத்தட்ட 18 லட்சத்து 50 ஆயிரம் அரசு பள்ளி மாணவ மாணவிகள் வயிறார சாப்பிட காரணமான இந்த திட்டத்தை இன்றைக்கு விரிவுபடுத்தியிருக்கிறேன். இனிமேல், அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 2 லட்சத்து 23 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களும் காலை உணவை சாப்பிட இருக்கிறார்கள். மொத்தமாக சொல்லவேண்டும் என்றால் நாள்தோறும் 20 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் சத்தான, சுவையான காலை உணவை சாப்பிடுவார்கள்.

காலை உணவு திட்ட ஒதுக்கீடு பற்றி, அதிகாரிகள் என்னுடன் விவாதித்தபோது, “அதை நிதி ஒதுக்கீடு என்று சொல்லாதீர்கள், வருங்கால தலைமுறையை உருவாக்குகிற முதலீடு என்று சொல்லுங்கள்” என்று ஆணித்தரமாக சொன்னேன். இந்த திட்டம் மாணவ – மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை அளிக்கிறது. பெற்றோர்களுக்கு பொருளாதார சுமையை குறைக்கிறது. பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுடைய எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இடைநிற்றலை குறைக்கிறது. இதுபோல ஏராளமான நன்மைகள் காலை உணவு திட்டத்தால் விளைகிறது.

தமிழ்நாட்டு குழந்தைகள் படிப்பதற்கு எதுவும் தடையாக இருக்க கூடாது என்று நினைக்கிறோம். அது பசியாக இருந்தாலும் சரி, நீட் தேர்வாக இருந்தாலும் சரி, ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையாக இருந்தாலும் சரி, எந்த தடை வந்தாலும் அந்த தடைகளை உடைப்பதுதான் எங்களுடைய முதல் பணி. ஒன்றிய பாஜ அரசு அரசியலுக்காக இப்போது, நெருக்கடி நிலையை பற்றி நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பேசுகிறார்கள்.

ஆனால், நாம் அவர்களிடம் கேட்கிற கேள்வி, “நெருக்கடி நிலை காலத்தில், ஒத்திசைவு பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை உடனடியாக மாநில பட்டியலுக்கு மாற்ற ஒன்றிய அரசு தயாராக இருக்கிறதா? இந்த ஆக்கப்பூர்வமான செயலை அவர்கள் செய்வார்களா? நம்மை பொறுத்தவரை, நீட் தேர்வு – புதிய கல்வி கொள்கை தேவையற்றது. அதை எதிர்க்கிறோம். ஒருபக்கம் அரசியல் மற்றும் சட்ட போராட்டங்களை நடத்துகிறோம். இன்னொரு பக்கம் மாணவர்களின் நலனுக்காக பள்ளி கல்விக்கும், கல்லூரிகளுக்கும், உயர்கல்விக்கும் ஏராளமான திட்டங்களை தீட்டுகிறோம்.

எனவே, தடைகளை நாங்கள் உடைக்கிறோம். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். ஏனென்றால், நான் திரும்பவும் சொல்கிறேன், கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து, அந்த சொத்தை தமிழ்நாட்டு மாணவர்கள் பெற்றாக வேண்டும். மாணவ செல்வங்களே! “படிங்க… படிங்க… படிங்க… நீங்கள் உயர படிங்க.. நீங்கள் உயர உங்கள் வீடும் உயரும், இந்த நாடும் உயரும்” என்று உங்களையெல்லாம் மனதார வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

* மாணவ செல்வங்களின் பசியை போக்கி மனநிறைவு அடைந்தேன்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “‘முதல்வரின் காலை உணவு திட்டம்’ விரிவாக்கம் செய்யப்பட்டவுடன் தமிழ்நாடு முழுக்க எத்தனை குழந்தைகளுக்கு உணவளிக்கப்பட்டது என்பதை முதல்வரின் தகவல்பலகை வழியாக கண்காணித்து மாணவ செல்வங்களின் பசியை போக்கிய மனநிறைவை அடைந்தேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

* உணவின் தரம் ஒரு துளிகூட குறையக் கூடாது எம்பி, எம்எல்ஏக்களுக்கு முதல்வர் உத்தரவு
‘முதலமைச்சரின் காலை உணவு திட்டம்’ நம்முடைய திராவிட மாடல் அரசுக்கு நீடித்த புகழை தேடி தந்திருக்கிறது. திமுக அரசு தொடங்கிய பின்பு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், ஏன் கனடா போன்ற நாடுகளிலும் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் அமைச்சர்களையும், அதிகாரிகளையும், சட்டமன்ற உறுப்பினர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, “எந்த ஊரிலும் – எந்த பள்ளியிலும் – உணவின் தரம் ஒரு துளிகூட குறையக்கூடாது.

உங்கள் குழந்தைகள் சாப்பிடும் சாப்பாட்டை எப்படி கவனமாக பார்த்து கொள்வீர்களோ அதுபோல, அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுடைய சாப்பாட்டையும் கவனமாக ’ஸ்பெஷல் கேர்’ எடுத்துப் பார்க்க வேண்டும். நான் ஆய்வுக்கு வெளியூர் போகும் போதெல்லாம், ஏதாவது ஒரு பள்ளிக்கு திடீரென போகிறேன்.

அங்கே இருக்கிற பிள்ளைகளுடன் பேசுகிறேன். காலை உணவு எப்படி இருக்கிறது என்று பார்க்கிறேன். அந்த உணவை நானே சாப்பிட்டும் பார்க்கிறேன். அமைச்சர் தம்பி உதயநிதிகூட சுற்றுப்பயணம் போகிறபோது, நிகழ்ச்சிக்கு போகிறபோது, இதுபோல ஆய்வு செய்வதை பார்க்கிறேன். மற்ற அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளும் மாவட்ட ஆட்சியர்களும், அதிகாரிகளும் அவரவர்கள் பகுதிகளில் இருக்கிற பள்ளியில் இப்படி திடீர், திடீரென்று ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் பேசினார்.

 

The post அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: திருவள்ளூர் மாவட்ட விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur District Ceremony ,K. Stalin ,SOULURAI CHENNAI ,K. ,Stalin ,
× RELATED உலக புரட்சி வரலாற்றை பேசி வளர்ந்த...