×
Saravana Stores

தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்; விஷத்தில் பிழைத்த கணவரை பட்டப்பகலில் தலையணையால் அமுக்கி கொன்ற மனைவி

கோவை: கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவருக்கு விஷம் வைத்ததில் அவர் உயிர் பிழைத்த ஆத்திரத்தில் அவரை பட்டப்பகலில் தலையணையால் அமுக்கி கொலை செய்த மனைவி, காதலனுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை வடவள்ளி அருகே உள்ளது சோமையம்பாளையம். இங்குள்ள காளப்பநாயக்கன்பாளையம் பிரிவை சேர்ந்தவர் பிரபு (40). லேத் ஒர்க் ஷாப் தொழிலாளி. இவரது மனைவி லாவண்யா (33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

லாவண்யா தனது மாமியார் கலாவதியுடன் தள்ளுவண்டியில் டிபன்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் பிரபுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்ற அவர் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
நேற்று முன்தினம் கடையில் இருந்து லாவண்யா வீட்டிற்கு வந்தார். அப்போது பிரபு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அவர் மாமியாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது பிரபுவின் கழுத்தில் காயம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் வடவள்ளி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது, டிபன் கடைக்கு அருகே தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு வேலை செய்யும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பைரே கவுடா (39) என்பவர் அடிக்கடி வந்து சாப்பிடுவார். அப்போது லாவண்யாவுக்கும், பைரே கவுடாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.

தனிமை கிடைக்கும்போது உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரியவந்ததும் கடுமையாக கண்டித்து டிபன் கடைக்கு செல்ல வேண்டாம். வீட்டிலேயே இரு என்று கூறினார். இதனால் கள்ளக்காதல் ஜோடி சந்திக்க முடியாமல் தவித்தனர். ஒரு கட்டத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதுகுறித்து கள்ளக்காதலனிடம் கூறினார். அவரும் இதற்கு சம்மதித்தார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவில் விஷம் கலந்து கணவருக்கு கொடுத்தார். அதனை சாப்பிட்ட அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் உயிர்பிழைத்த அவர் வீடு திரும்பி ஓய்வில் இருந்தார். கணவரை தீர்த்துக்கட்டும் முடிவில் உறுதியாக இருந்த கள்ளக்காதல் ஜோடி மீண்டும் திட்டம் தீட்டியுள்ளனர். நேற்று முன்தினம் வழக்கம்போல் மாமியார் கடைக்கு சென்றார். கணவரை கவனிப்பதுபோல் நாடகமாடிய லாவண்யா கள்ளக்காதலனை அழைத்துள்ளார். மாத்திரை, மருந்து சாப்பிட்ட பிரபு சோர்வாக படுத்திருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த பைரே கவுடா படுத்திருந்த பிரபுவின் கழுத்தை டவலால் இறுக்கினார். அதிர்ச்சியடைந்த பிரபு கை, கால்களை உதைத்து சத்தம்போட்டார். சத்தம் வருவதை அறிந்த லாவண்யா கணவரின் முகத்தை தலையணையால் அமுக்கிப்பிடித்தார். சிறிது நேரம் துடித்த பிரபுவின் சத்தம் அடங்கியது. உயிர் பிரியும்வரை இருவரும் போராடி அவரை கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். கணவரை மனைவியே கள்ளக்காதலுனுடன் சேர்ந்து கொன்ற சம்பவம் இந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்; விஷத்தில் பிழைத்த கணவரை பட்டப்பகலில் தலையணையால் அமுக்கி கொன்ற மனைவி appeared first on Dinakaran.

Tags : Goa ,Goai Vadavalli ,
× RELATED கோவையில் தேசிய அளவிலான வாகனத்...