×
Saravana Stores

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி பொன்னை பாலுவிற்கு பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரது மனைவி மனு..!!

சென்னை: தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 11 பேரில் திருவேங்கடம் என்ற நபர் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் ரவுடி பொன்னை பாலுவிற்கு பாதுகாப்பு கேட்டு அவரது மனைவி தரப்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கடந்த 5ம் தேதி ஒரு கும்பல் வீட்டருகே படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 11 நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த கொலையானது கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிவாங்கவே அவரது சகோதரரான பொன்னை பாலு உட்பட அவரது கூட்டாளிகள் இணைந்து கொலையை நிகழ்த்தி இருப்பது அவர்களது வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 5 நாட்கள் அவர்களை போலீஸ் காவல் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்றுடன் அவர்களது போலீஸ் காவல் நிறைவடைய உள்ளது. இதற்கிடையே நேற்று இந்த வழக்கில் கைதான திருவேங்கடம் என்பவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்து சென்ற போது அவர் தப்பிக்க முயலும் போது துப்பாக்கியை பயன்படுத்தி போலீசாரை தாக்க முயற்சித்தார். தற்காப்புக்காக போலீசார் அவரை என்கவுண்டர் செய்தது தெரியவந்தது. இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னைபாலுவின் மனைவி விஜயசாந்தி என்பவர் நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக வந்துள்ளார். அந்த மனுவில் பொன்னைபாலுவிற்கு அசம்பாவிதம் சம்பவங்கள் நிகழ வாய்ப்பிருப்பதால் அவருக்கு உடனடியாக போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படி அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

சிறைக்கு சென்றாலும் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனஅந்த மனுவில் அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவர் வந்தவுடன் நாளை காலை இந்த மனுவை கொண்டுவருமாறு போலீசார் அவருக்கு அறிவுறுத்தி உள்ளனர். இதற்கிடையே என்கவுண்டர் செய்யப்பட்ட நபரின் உடலானது பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று காலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அதன் பின்பாக மூலகோத்திரத்தில் உள்ள சுடுகாட்டில் அவரது உடலானது புதைக்கப்பட்ட உள்ளது. தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பொன்னை பாலுவிற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு அவரது மனைவி தற்போது மனு அளிக்க வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி பொன்னை பாலுவிற்கு பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரது மனைவி மனு..!! appeared first on Dinakaran.

Tags : Rawudi Ponnai Balu ,Armstrong ,Chennai ,Tamil Nai Samaj Party ,Thiruvenkadam ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள 26 பேரும் அறிவுரை கழகத்தில் ஆஜர்