×
Saravana Stores

ஆம்பூர் அருகே விடிய விடிய பரபரப்பு தேசிய நெடுஞ்சாலையில் 8 கி.மீ நடந்து சென்ற யானை: போக்குவரத்து நிறுத்தம், மின்சாரம் துண்டிப்பு

ஆம்பூர்: ஆம்பூர் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 8 கி.மீ. உலா வந்த ஒற்றை தந்த யானையால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதிகள் இருளில் மூழ்கியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம் மற்றும் ஆம்பூர் வன சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒற்றை தந்தத்துடன் கூடிய டஸ்கர் என்ற யானை சுற்றி திரிந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் பனங்காட்டேரி மலைக்கிராமத்திற்கு செல்லும் வழியில் முகாமிட்டிருந்த இந்த யானையை, வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் இந்த யானை சாணாங்குப்பம் காப்புக்காட்டை ஒட்டியுள்ள வனப்பகுதிக்குள் திரிந்தது. பின்னர், ஆம்பூர் அடுத்த மாதனூர் உடையராஜபாளையம் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய நிலங்களுக்குள் நுழைந்தது. முன்னாள் அமைச்சரான பாண்டுரங்கன் நிலத்திற்கு வந்த யானை, அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை அருகே வந்தது.  இதை கண்ட அப்பகுதியினர் பட்டாசு வெடித்தும், தீபந்தங்களை காட்டியும் யானையை காட்டுப்பகுதிக்கு விரட்ட முயன்றனர்.

மேலும் ஆம்பூர் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே யானை நள்ளிரவு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றது. இதனால் வாகனங்கள் மோதி யானைக்கு பாதிப்பு ஏற்படும் என கருதிய வனத்துறையினர் மற்றும் ஆம்பூர் தாலுகா போலீசார் போக்குவரத்தை நிறுத்தினர். உடையராஜபாளையத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. தூரம் தேசிய நெடுஞ்சாலையிலும், சர்வீஸ் சாலையிலும் மாறி மாறி நடந்து சென்ற யானை வெங்கிளி- ஜமீன் பகுதிகளுக்கு இடையே விவசாய நிலங்களுக்குள் புகுந்து சென்றது.

வயது மூப்பு காரணமாக மெதுவாக சென்ற அந்த யானை, நேற்று அதிகாலை 3 மணியளவில் பாலாறு பகுதி அருகே வந்து நின்றது. யானை சாலையை கடந்து செல்ல ஏதுவாக அப்பகுதிகளில் மின்சப்ளை துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதிகள் இருளில் மூழ்கியது. பின்னர் அந்த யானை மீண்டும் வந்த வழியே திரும்பி தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தது. இதனால் நேற்று அதிகாலை மீண்டும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ஒன்றரை கிலோ மீட்டர் நடந்து சென்று, கீழ்முருங்கையை சேர்ந்த சிவசங்கரன் என்பவரது செங்கல் சூளைக்குள் நுழைந்தது.

பின்னர் அப்பகுதியில் இருந்த மாந்தோப்பில் புகுந்து மரக்கிளைகளை முறித்தும், சப்போட்டா பழங்களையும் தின்றது. அங்கு தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்தும், உடல் மீது பீய்ச்சி அடித்தும் இளைப்பாறியது. பின்னர் அங்கிருந்து வெளியேறி அப்பகுதியில் உள்ள மற்றொரு விவசாய நிலத்திற்கு சென்றது. தொடர்ந்து அருகிலுள்ள தனியார் ஓட்டலுக்கு பின்புறம் விவசாய நிலத்தில் முகாமிட்டது.

இந்நிலையில், யானை தங்கியிருந்த இடத்திற்கு கலெக்டர் தர்ப்பகராஜ், வேலூர் எம்பி கதிர் ஆனந்த், மாவட்ட வன அலுவலர் மகேந்திரன், வாணியம்பாடி கோட்டாட்சியர் அஜிதா பேகம், எம்எல்ஏ வில்வநாதன், மாதனூர் ஒன்றிய குழுதலைவர் சுரேஷ்குமார், ஆம்பூர் டிஎஸ்பி அறிவழகன் உள்ளிட்டோர் சென்று, யானையின் நடமாட்டம் குறித்தும், திரும்ப யானையை அடர்ந்த காப்புக்காட்டிற்கு அனுப்புவது குறித்தும் ஆலோசித்தனர்.

மேலும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் தர்ப்பகராஜ், வேலூர் எம்பி கதிர் ஆனந்த் ஆகியோர் வனதுறையினரை வலியுறுத்தினர். கலெக்டர் தர்ப்பகராஜ் நிருபர்களிடம் கூறுகையில், ‘கீழ்முருங்கை பகுதியில் முகாமிட்டுள்ள யானையை, வனத்துறையினர் போலீசார் உதவியுடன், அருகில் உள்ள சாணாங்குப்பம் காப்பு காட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்கின்றனர். ஏடிஎப் எனப்படும் வனமோதல் தடுப்பு சிறப்பு பிரிவினர் உதவியால் யானையை காட்டுக்குள் விரட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது’ என்றார்.

The post ஆம்பூர் அருகே விடிய விடிய பரபரப்பு தேசிய நெடுஞ்சாலையில் 8 கி.மீ நடந்து சென்ற யானை: போக்குவரத்து நிறுத்தம், மின்சாரம் துண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Dawn ,Ambur ,National Highway ,Ampur ,Chennai-Bangalore National Highway ,Alangayam ,Ampur Forest Reserve ,Tirupathur ,Dinakaran ,
× RELATED பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில்...