மும்பை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து பேசினார். தற்போதைய அரசியல் சூழல், பொருளாதாரம் குறித்து அவர்கள் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக மும்பை வந்திருந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நேற்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை அவரது அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷாவில் சந்தித்தார். இருவரும் அரை மணி நேரம் கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பின் போது ஒன்றிய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு, மகாராஷ்டிரா பொதுப்பணித்துறை அமைச்சர் தாதா பூஸ், ஷிண்டேவின் மகனும் எம்பியுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பு தொடர்பாக மகாராஷ்டிர முதல்வரின் டிவிட்டர் தள பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், ஷிண்டேவும் நாயுடுவும் இரு மாநிலங்களுக்கு இடையேயான சமூக மற்றும் கலாச்சார பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு குறித்து விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் டிஜிட்டல் துறையில் வேலைவாய்ப்புகள் குறித்தும் முதல்வர்கள் ஆலோசித்ததாக கூறப்பட்டுள்ளது.
The post மகாராஷ்டிரா முதல்வருடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு appeared first on Dinakaran.