×
Saravana Stores

சர்ச்சைகளுக்கிடையே 46 ஆண்டுகளுக்கு பிறகு பூரி ஜெகநாதர் கோயில் கருவூல உள் அறை திறப்பு

பூரி: ஒடிசாவின் பூரியில் ஜெகநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு பழங்கால மன்னர்கள் ஏராளமான விலை உயர்ந்த நகைகள், கற்கனை தானமாக கொடுத்துள்ளனர். இந்த விலை மதிப்பற்ற நகைகள் உள்ளிட்ட பொருள்கள் ஜெகநாதர் கோயிலில் பக்தர்கள் தரிசிக்கும் ஜெகமோகனா வளாகத்தில் ரத்னா பந்தார் என அழைக்கப்படும் கருவூலத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இது பிடார் பந்தார்(உள் அறை), பஹார பந்தார்(வௌி அறை) என இரண்டு அறைகளை கொண்டது.

இதில் வௌி அறையான பஹார பந்தார் குறிப்பிட்ட காலஇடைவௌியில் திறக்கப்பட்டு சில பொருள்கள் எடுக்கப்பட்டு பூஜைகளுக்கு பயன்படுத்திய பிறகு, மீண்டும் வைக்கப்பட்டு பூட்டப்படும். ஆனால் பிடார் பந்தார் பல ஆண்டுகளாக திறக்கப்படவில்லை. இதில் எவ்வளவு விலை மதிப்பற்ற ஆபரணங்கள், பிற பொருள்கள் உள்ளன என்பது குறித்து பல்வேறு சர்ச்சை கருத்துகள் நிலவி வருகின்றன.
கடைசியாக கடந்த 1978ம் ஆண்டு மே 13 – ஜூலை 23 ஆகிய தேதிகளுக்கு இடையே பிடார் பந்தார் திறக்கப்பட்டது.

அதன் பிறகு 46 ஆண்டுகளாக திறக்கப்படவே இல்லை என கூறப்படுகிறது. அதற்கு அதன் சாவிகள் தொலைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அண்மையில் நடந்து முடிந்த மக்களவை, ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் பிரசாரங்களில் கருவூலத்தின் சாவி தமிழ்நாட்டில் உள்ளதாக சர்ச்சை கருத்துகளை பாஜ கூறி வந்தது. ஒடிசாவில் பாஜ ஆட்சிக்கு வந்தால் ஜெகநாதர் கோயிலின் உள்அறையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்து, மாநிலத்தில் ஆட்சியையும் கைப்பற்றியது.

இதையடுத்து பூரி ஜெகநாதர் கோயில் கருவூலத்தின் உள்அறையை திறந்து அங்குள்ள விலை உயர்ந்த பொருள்களை மதிப்பிட, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதற்காக ஒடிசா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிஸ்வநாத் ராத் தலைமையில் ஒரு குழுவை அமைத்து முதல்வர் மோகன் சரண் மாஜி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் பல்வேறு சடங்குகளுக்கு பிறகு ஜெகநாதர் கோயிலின் பிடார் பந்தார் என்ற உள் அறை நேற்று மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டது. இதுகுறித்து முதல்வர் அலுவலகம் தன் டிவிட்டர் பக்கத்தில், “உங்கள் விருப்பத்தின்படி ஜெகநாதர் கோயிலின் 4 கதவுகள் முன்பு திறக்கப்பட்டன. இப்போது உங்கள் விருப்பப்படி 46 ஆண்டுகளுக்கு பிறகு ரத்னா பந்தரின் பிடார் பந்தர் திறக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கருவூலத்தில் உள்ள நகைகள் மற்றும் பொருட்கள் பின்னர் மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சர்ச்சைகளுக்கிடையே 46 ஆண்டுகளுக்கு பிறகு பூரி ஜெகநாதர் கோயில் கருவூல உள் அறை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Puri Jeganathar Temple Treasury ,Puri: Jehanadar Temple ,Puri, Odisha ,Jeganathar Temple Ratna ,Jekamogana ,
× RELATED ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் ஆலய ரத்ன பந்தர் அறை திறப்பு